ஒன்பது சதவீத வளர்ச்சியையும், வேலைவாய்ப்புகளையும், முதலீடுகளையும் ஏற்படுத்தியுள்ளதால், பணவீக்கத்தின் தாக்கத்தை பொதுமக்கள் சற்று பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
அதே நேரத்தில், எக்காரணம் கொண்டும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது,” என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக தெரிவித்தார்.
விலைவாசி உயர்வு குறித்த விவாதம், லோக்சபாவில் இரண்டு நாட்களாக நடந்தது. இந்த விவாதத் திற்கு பதில் அளித்து நேற்று நிதிஅமைச்சர் பிரணாப் பேசியதாவது: நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி வீதம் 9 சதவீதமாக உள்ளது. இந்த வளர்ச்சியின் மூலம் வேலைவாய்ப்புகளும், முதலீடுகளும் பெருகியுள்ளன. பா.ஜ., ஆட்சியின் போது விலைவாசி இந்த அளவுக்கு இல்லை. ஆனால், அப்போது நாட்டின் வளர்ச்சி வீதம் வெறும் 3 சதவீதம் மட்டுமே; இதை யாரும் மறந்துவிடக் கூடாது. எனவே, வளர்ச்சி வீதத்தை கருத்தில் கொண்டு பணவீக்கத்தின் தாக்கத்தை பொதுமக்கள் சற்று பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். எக்காரணம் கொண்டும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது. அரிசியின் விலை ரூ.23 லிருந்து ரூ.22 ஆகவும், கோதுமை ரூ.17 லிருந்து ரூ.16 ஆகவும், சர்க்கரை ரூ.44 லிருந்து ரூ.31 ஆகவும், கடுகு எண்ணெய் ரூ.71 லிருந்து ரூ.61 ஆகவும், வெங்காயம் ரூ.23 லிருந்து ரூ.14 ஆகவும் குறைந் துள்ளன. விவசாய உற்பத்தியைப் பெருக்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. பொது வினியோக திட்டத்தை செம்மைப்படுத்திடவும் மாநில அரசுகள் ஒத்துழைப்புடன் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. மாநில அரசுகளும், எல்லா எதிர்க்கட்சிகளும் சேர்ந்து, சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை மாற்றிட முன்வர வேண்டும். அந்த சட்டத் திருத்தத்தை செய்தால், இதுபோன்று அடிக்கடி பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றம் செய்திட தேவையிருக்காது. இந்தியாவில் தான் அதிக அளவில் பருப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. பர்மா, துருக்கி போன்ற நாடுகளில் கூட இந்த அளவு உற்பத்தி இல்லை. இருப்பினும், இன்னும் 60 ஆயிரம் கிராமங்களில் பருப்பு உற்பத்தி செய்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த காரீப் பருவத்தில் இதற்கான வேலைகள் துவங்கப்படும். பருப்பு வகைகள் 4 மில்லியன் டன்னும், காய்கறி வகைகள் 1 மில்லியன் டன் வரையிலும் பற்றாக்குறை உள்ளது. உணவுப்பொருட்களை பாதுகாக்கும் வகையில் எஸ்மா உள்ளிட்ட அனைத்து சட்டங்களுமே மாநில அரசுகளின் கைகளில் தான் உள்ளன. அவர்கள் தான், பதுக்கல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழைகள் துயரப்படுவதை கண்டு கொள்ளாமல், மத்திய அரசு பாராமுகமாக உள்ளது என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன; அது சரியல்ல. ஒரு கிராமவாசியின் கஷ்டம் என்ன என்பது எனக்கும் தெரியும். ஏனெனில், நானும் மண்ணெண்ணெய் விளக்கில் தான் படித்தேன். பத்து கி.மீ., தூரம் நடந்து தான் பள்ளிக்குச் சென்றேன். அதனால், எனக்கு ஏதோ ஏழைகள் பற்றிய உணர்வே இல்லாதது மாதிரி கூற வேண்டாம். பொதுவான பணவீக்கம் ஜூன் மாதத்தில் 10.55 சதவீதமாக இருந்தது. உணவு பணவீக்கம் ஜூலை 17ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 9.67 சதவீதமாகக் குறைந்துள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் கூட்டாக இணைந்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முன்வர வேண்டும். கடந்த 2001ம் ஆண்டு முதல் இப்போது வரை மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப்படும் உணவுப்பொருட்களின் விலைகளை மத்திய அரசு உயர்த்தவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார். இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், ”வளர்ச்சி வளர்ச்சி என்று மட்டும் கூறாதீர்கள். இந்த வளர்ச்சி, வசதி படைத்த மக்களுக்கு மட்டும் தான். இதனால், சாதாரண மக்களுக்கு எந்த லாபமும் இல்லை. ‘ஆம் ஆத்மி’ என்று கூறி பிரசாரம் செய்தீர்கள். அவர்களும் நம்பி உங்களுக்கு ஓட்டுப் போட்டனர். அவர்களுக்கு இந்த வளர்ச்சி மூலம் எந்த பயனும் இல்லை; மாறாக வேதனைப்படுகின்றனர்,” என்றார்.விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் பங்கேற்ற பா.ஜ., உட்பட ஒட்டு மொத்த எதிர்க்கட்சி எம்.பி.,க்களும், ‘விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும்; பெட் ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளைக் குறைக்க வேண்டும்’ என, வலியுறுத்தினர். ஆனால், இந்தக் கோரிக்கையை அரசாங்கம் முற்றிலுமாக நிராகரித்து விட்டது. பிரணாப் பேசி முடித்த பிறகு எழுந்து பேசிய சுஷ்மா, மறுபடியும் அரசுக்கும், சபாநாயகருக்கும் கூட கோரிக்கை வைத்தார்; எதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மாறாக ஏற்கனவே திட்டமிட்டபடி சபாநாயகர் மீரா குமார், ‘விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கைஎடுக்க வேண்டும்’ என்ற, ஒரு வரி தீர்மானத்தை வாசித்து விட்டு விவாதத்தை நிறைவு செய்தார்.
Leave a Reply