ஸ்ரீமுத்துக்குமரன் மருத்துவ கல்லூரி: அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களுக்கு சிக்கல்

posted in: மற்றவை | 0

சென்னை : ஸ்ரீமுத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியில் சேர அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்த மாணவர்களை, கல்லூரியில் சேர்க்க நிர்வாகம் மறுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், மாங்காட்டை அடுத்த சிக்கராயபுரத்தில், ஸ்ரீமுத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி இந்த ஆண்டு முதல் துவக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பில், 150 மாணவர்களை சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும், ஸ்ரீமுத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி அரசு ஒதுக்கீட்டிற்கு இடங்களை வழங்க வேண்டும். மருத்துவக் கல்வி இயக்குனரகம் நடத்திய கவுன்சிலிங்கில் இக்கல்லூரி இடம்பெற்றிருந்தது. ஸ்ரீமுத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியை சிறுபான்மை அல்லாத கல்லூரியாக கணக்கிட்டு, அக்கல்லூரியில் 97 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மருத்துவக் கல்வி இயக்குனரகம் நடத்திய கவுன்சிலிங் மூலம் ஒதுக்கப்பட்டன. அரசு ஒதுக்கீட்டில் அக்கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள், இன்று காலை 10 மணிக்குள் கல்லூரியில் பணத்தை செலுத்தி சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அரசு ஒதுக்கீட்டில் ஸ்ரீமுத்துக்குமரன் கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர்கள், கல்லூரியில் சேரச் சென்றபோது, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கல்லூரியில் மாணவர்களை சேர்க்க மறுத்து விட்டதாக இடம் கிடைத்த மாணவர்களும், பெற்றோரும் தெரிவித்தனர். பெற்றோர் கூறும்போது, “அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்த மாணவர்கள், கடந்த சில நாட்களாக பல்வேறு வெளியூர்களிலிருந்து வந்து கல்லூரியில் சேர முயன்றபோது, பணம் வசூலிக்க மறுத்துவிட்டனர். அரசிடமிருந்து இன்னும் உத்தரவு வரவில்லை; உத்தரவு வந்த பிறகு தான் மாணவர்களை சேர்க்க முடியும் என, கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகின்றனர்’ என, தெரிவித்தனர். ஸ்ரீமுத்துக்குமரன் சிறுபான்மை அந்தஸ்து கேட்டு அரசிடம் விண்ணப்பித்திருப்பதாக தெரிகிறது. சிறுபான்மை அந்தஸ்து கிடைத்தால், அரசு ஒதுக்கீட்டில் 75 இடங்கள் மட்டுமே நிரப்பப்படும். சிறுபான்மை அந்தஸ்து கிடைப்பதற்காக கல்லூரி நிர்வாகம் காத்திருப்பதாகவும், அதற்காகவே, மாணவர் சேர்க்கையை நடத்த தயங்குவதாகவும் மருத்துவக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜிடம் கேட்டபோது, “”இப்பிரச்னை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்,” என்றார். மருத்துவக் கல்வி இயக்குனர் விநாயகத்திடம் கேட்டபோது, “”ஸ்ரீமுத்துக்குமரன் மருத்துவக் கல்லூரிக்கு அரசு ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்ட 97 மாணவர்கள் பட்டியல் கல்லூரிக்கு அனுப்பப்பட்டு விட்டது,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *