வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நைஜீரிய வாலிபர் மூலம் வெடிபொருள் அனுப்பிய தனிநபர் அல்லது குழு தான் இப்போதும் அதே ரக வெடிபொருட்களை அனுப்பியிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் ஏமன் நாட்டில் இச்சம்பவத்தோடு தொடர்புடைய ஓர் இளம்பெண்ணைக் கைது செய்து, அந்நாட்டு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இருநாட்களுக்கு முன், ஏமன் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குப் புறப்பட்ட இரு விமானங்களும், துபாய் மற்றும் லண்டனின் கிழக்கு மிட்லேண்ட்ஸ் விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்ட போது, அவற்றில் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அந்த வெடிபொருட்கள் குறித்துப் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவிமானங்களிலும், “பிரின்டர்’ கருவியில் பயன்படுத்தப்படும் “டோனர் கேட்ரிட்ஜ்’ ஜுக்குள் சக்தி வாய்ந்த வெடிபொருள் வைக்கப்பட்டு அதில், மொபைல்போனின் ஒரு சிப் வைக்கப்பட்டு, அதனுடன் “ஒயர்’ இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. வெளியில் இருந்து மொபைல்போன் மூலம் இதை இயக்கினால் விமானம் சுக்குநூறாகி விடும்.
இதுகுறித்து பிரிட்டன் அதிகாரிகள் கூறுகையில்,”இந்த வெடிபொருள் மிக கவனத்துடன் வைக்கப்பட்டுள்ளது. தொழில்முறை ரீதியில் இதைச் செய்துள்ளனர்’ என்றனர். கடந்த ஆண்டு, அமெரிக்காவின் கிறிஸ்துமஸ் விழாவைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் அமெரிக்க விமானம் ஒன்றில், நைஜீரிய வாலிபர் உமர் பரூக் அப்துல் முத்தாலப் என்பவர், தன் உள்ளாடையில் இதே ரக வெடிபொருளை வைத்துக் கொண்டுதான் ஏறியுள்ளார். அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகரில் அவர் பிடிபட்டார். பொதுவாக உலக நாடுகளின் ராணுவங்களில் “பென்டா எரித்ரிட்டால் டிரைநைட்ரேட்’ (பி.இ.டி.என்.,) என்ற வெடிபொருள் தான் பயன்படுத்தப்படும். நைஜீரிய வாலிபர் கொண்டு வந்தது 80 கிராம் பி.இ.டி.என்., வெடிபொருள். ஆனால், இப்போது சிக்கியிருப்பது அதைப் போல ஐந்து மடங்கு அளவுள்ள வெடிபொருள் ஆகும். ஒரு விமானத்தைத் தகர்க்க ஆறு கிராம் பி.இ.டி.என்., போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்,”கடந்த ஆண்டு, நைஜீரிய வாலிபர் மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட அதே தனிநபர் அல்லது குழு தான் இப்போதும் இந்த பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளது’ என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரபு கண்டத்தில் செயல்பட்டு வரும் அல்- குவைதா தான் இதில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
பெண்ணிடம் விசாரணை: இதற்கிடையில், ஏமன் நாட்டின் தலைநகரான சனாவில் மருத்துவத் துறையில் பட்டப்படிப்பு படித்து வரும் ஓர் இளம்பெண்ணை அந்நாட்டு அதிகாரிகள் இவ்வழக்குத் தொடர்பாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவரது உறவினர் பெண் ஒருவரையும் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தை அடுத்து, ஏமனில் இருந்து பிரிட்டனுக்கு வரும் அல்லது பிரிட்டன் வழியாகச் செல்லும் அனைத்து சரக்குப் போக்குவரத்தையும் அந்நாட்டு அரசு நிறுத்தி வைத்துள்ளது. பிரெஞ்சு அரசும் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. எகிப்தில் சரக்குகள் அனைத்தும் சோதனையிடப்பட்டு வருகின்றன. ஏமனில் இருந்து வரும் இ-மெயில்களை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில், ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சலே,”ஏமன் தொடர்ந்து பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடி வருகிறது. இதில், அன்னிய நாடுகள் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சவுதி அரசுகளுடன் ஏமன் தொடர்ந்து புலனாய்வு ஒத்துழைப்பைப் பெற்று வருகிறது’ என்று கூறியுள்ளார்.
Leave a Reply