அமெரிக்க பொருளாதார நடவடிக்கைகள்: நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அதிருப்தி

posted in: உலகம் | 0

நியூயார்க்:”அமெரிக்கா தங்களது பொருளாதார நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, மேற்கொண்டுள்ள தற்காப்பு நடவடிக்கை கொள்கைகள் ஏற்புடையதல்ல’ என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

நியூயார்க்கில் நடைபெறும் இந்திய முதலீட்டு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நேற்று செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:தங்களது பொருளாதார நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அமெரிக்கா மேற்கொண்டுள்ள கொள்கை முடிவுகள் தற்காப்பு நோக்கு கொண்டவை. இதை ஏற்பதற்கு இல்லை. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் மற்றும் அமெரிக்காவின் உயர் அதிகாரிகளை சந்திக்கும் போது இக்கருத்தை வலியுறுத்த இருக்கிறேன். சர்வதேச அளவில் பொருளாதாரம் மோசமாகியுள்ள நிலையில் தற்காப்பு கொள்கை சரியானதாக இருக்காது. பொருட்கள் தடையின்றி கிடைக்கவும், முதலீடுகளும், பணிகளும் எங்கு தேவையோ அங்கு தடையின்றி செல்ல வேண்டும்.

அப்போதுதான் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலை தீர்க்க முடியும். மாறாக தங்கள் பொருளாதார பாதிப்பிற்காக அவுட் சோர்சிங் உட்பட பல விஷயங்களை தடுக்கும் செயல் சரியல்ல.தென்கொரியாவில் இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில், தற்காப்பு கொள்கைகளுக்கு எதிராக இந்தியா சார்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்படும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

இந்திய முதலீட்டாளர்கள் அமைப்பில் பேசிய பிரணாப் முகர்ஜி கூறியதாவது:உலகிலேயே வேகமான பொருளாதார வளர்ச்சியை கண்டுவரும் இரண்டாவது நாடு இந்தியா. 9 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியை விரைவில் எட்ட இருக்கிறோம். உலகளவில் பொருளாதாரம் நலிவடைந்த நிலையிலும், 2008-2009ம் ஆண்டு இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருந்தது. அதற்கு முன், தொடர்ந்து மூன்றாண்டுகளாக 9 சதவீதத்திற்கு மேல் இருந்தது. 2009-10ம் ஆண்டில் 7.4 சதவீதமாக இருந்தது.

வளர்ந்துவரும் நாடுகளுக்கு சர்வதேச நிதியத்தின் ஒதுக்கீடு 5 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக அதிகரிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளேன். மேலும் உலக அளவில் பொருளாதார வளர்ச்சிக்கு, வளரும் நாடுகள் தங்கள் பங்கை சீராகச் செய்கின்றன.இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.இதற்கிடையில் சர்வதேச நிதியம்(ஐ.எம்.எப்.,) நேற்று வெளியிட்ட பொருளாதார அறிக்கையில்,” இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, இந்தாண்டு 9.7 சதவீதமாக இருக்கும். அடுத்தாண்டு, 8.4 சதவீதமாக இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *