மதுரை : அரசு பணியிலுள்ள ஒருவர் ராஜினாமா செய்து விட்டால், அப்பணிக்கான அனைத்து பலன்களும் தானாகவே முடிந்து விடும் என, மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது.
குளச்சலை சேர்ந்த கணேசன் தாக்கல் செய்த ரிட் மனு: ஏற்கனவே, குளச்சல் நகராட்சியில் 1977 ஜூலை19 முதல் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்தேன். 1982 டிச., 20ல் ராஜினாமா செய்தேன். மறுநாள் மின்வாரியத்தில் பணியில் சேர்ந்தேன். 2006 அக்., 31ல் ஓய்வு பெற்றேன். எனக்கு மின்வாரியத்தில் பணிபுரிந்த காலத்தை கணக்கிட்டு, ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட்டன. நகராட்சியில் பணிபுரிந்த காலத்தையும் சேர்த்து, ஓய்வூதிய பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என, கோரினார். மனு நீதிபதி கே.சந்துரு முன் விசாரணைக்கு வந்தது. இதற்கு குளச்சல் நகராட்சி வக்கீல் கே.பி.கிருஷ்ணதாஸ் ஆட்சேபம் தெரிவித்தார்.
அதை ஏற்று, மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் நகராட்சியில் பணிபுரிந்த காலத்தை ஓய்வூதியத்திற்கு எடுக்க முடியாது. தமிழ்நாடு ஓய்வூதிய விதி 1978ல், அரசு பணியிலுள்ள ஒருவர், அதை ராஜினாமா செய்து விட்டால், அப்பணிக்கான பலன்கள் தானாகவே முடிந்து விடும், என தெரிவிக்கப்படுகிறது. மின்வாரியத்தில் பணிபுரிந்த காலத்தை கணக்கிட்டு மட்டும், ஓய்வூதிய பலன்களை பெற முடியும், என குறிப்பிட்டார்.
Leave a Reply