ஹனாய்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்த நிலையில் சீன பிரதமர் வரும் டிசம்பர் மாதம் இந்தியா வர விருப்பம் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவல் செயலர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது.
ஜப்பான், மலேசிய பயணம் முடித்து இந்திய பிரதமர் ஆசியான் மாநாடு நடக்கும் வியட்னாம் சென்றடைந்தார். அங்கு சீன பிரதமர் வென்ஜியாபோவை சந்தித்து பேசினார். பிரதமருடன் வர்த்தக அமைச்சர் ஆனந்த்சர்மா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவகங்கரமேனன், செயலர் லதா ரெட்டி ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின்போது காஷ்மீர் வாழ் மக்களுக்கு விசா வழங்குவதில் சீனா மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீன அரசு செய்யும் வளர்ச்சிப்பணிகள், அருணாசல பிரதேச விவகாரம் சுற்றுச்சூழல், ஜி. 8 மாநாடு,உள்ளிட்ட சாரம்சங்களை பிரதமர் விவாதித்தார். சீன பிரதமர் வென்ஜியாபோ வரும் டிசம்பர் மாதம் இந்தியா வர விருப்பம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதத்தில் காஷ்மீர் லெப்டினன்ட் ஜெனரல் ஜஸ்வாலுக்கு சீனா விசா வழங்க மறுத்ததை அடுத்து இருநாட்டு ராணுவ பரிமாற்றம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியா -சீனா உறவுகள் மேம்பட்டு இருப்பதாகவும், இரு நாட்டுகள் இடையே எவ்வித போட்டி மனப்பான்மையும் இல்லை என பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். நாளையும் தொடர்ந்து நடக்கும் ஆசியான் மாநாட்டில் பிரதமர் சிங் , ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், வியட்னாம் பிரதமர்களை தனித்தனியாக சந்தித்து பேசுகிறார்.
Leave a Reply