இந்தோனேசியா : இந்தோனேசியாவில், “மெரபி’ எரிமலை வெடித்துச் சிதறியதில், 28 பேர் உடல் கருகி பலியாயினர்; 14 பேர் தீக்காயம் அடைந்தனர்.
இந்தோனேசியா ஜாவா தீவில், யோக்யகர்த்தா நகருக்கு வெளியில் அமைந்துள்ள, “மெரபி’ எரிமலை, நேற்று முன்தினம் வெடிக்க ஆரம்பித்தது. பயங்கர வெப்பம் கொண்ட புகையும், சாம்பலும், எரிமலைக் குழம்பும் வெளிக்கிளம்பி, சுற்று வட்டாரங்களில் பரவ ஆரம்பித்தன.
கடந்த சில நாட்களுக்கு முன்பே, எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த, 11 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். எனினும், எரிமலையில் இருந்து நேற்று முன்தினம் வெளிப்பட்ட சாம்பல் மற்றும் வெப்பக் காற்றால், 28 பேர் உடல் கருகி பலியாயினர்; 14 பேர் கடுமையான தீக்காயம் அடைந்தனர். எரிமலையின் அருகிலுள்ள கிராமங்கள் அனைத்திலும் சாம்பல் பரவி, வெள்ளை மயமாகக் காட்சியளிக்கிறது. பல வீடுகளும், கால்நடைகளும், மரங்களும், எரிமலையில் இருந்து வெளியான வெப்பக் காற்றில் கருகிவிட்டன.
இதற்கிடையில், இரண்டு நாட்களுக்கு முன், சுமத்ரா தீவு அருகில் சுனாமி தாக்கிய சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை, 154 ஆக உயர்ந்துள்ளது. 380க்கும் மேற்பட்டோரை காணவில்லை. மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் தாமதமடைந்துள்ளன.
Leave a Reply