கொச்சி : சர்வதேசஅளவில் இயற்கை ரப்பர் உற்பத்தி குறையும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், நம் நாட்டிலும் ரப்பர் அதிகம் உற்பத்தியாகும் பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளதால், உற்பத்தி சிறிது பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ரப்பர் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்ற ஆகஸ்டு மாதத்தில் இதன் விலை குறைந்தது. இந்நிலையில், சென்ற சில வாரங்களாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விலை உயர்ந்து வருகிறது. சென்ற செப்டம்பர் 23-ந் தேதி அன்று நம் நாட்டில் ஒரு கிலோ ரப்பர் விலை ரூ.164.75-ஆக இருந்தது. இது, அக்டோபர் 8-ந் தேதி அன்று ரூ.174-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் மொத்த ரப்பர் உற்பத்தியில் 90 சதவீதம் கேரளாவில் உற்பத்தியாகிறது. அம்மாநிலத்தில் கனமழை பெய்துள்ளது. இதனையடுத்து, ரப்பர் உற்பத்தி பாதிக்கப்படும் என்ற அச்சப்பாட்டால் விலை உயர்ந்து வருகிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நாட்டில் ரப்பர் உற்பத்தி 7.6 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம், சென்ற செப்டம்பர் மாதத்தில்உற்பத்தி சரிவடைந்துள்ளதாக முன்கூட்டிய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. மழை நீடித்தால் இனிவரும் மாதங்களில் உற்பத்தி வளர்ச்சி சிறிது குறைய வாய்ப்புள்ளது. தாய்லாந்து போன்ற நாடுகளில் ரப்பர் பயிரிடும் பரப்பளவு மிகவும் குறைந்துள்ளது. இந்தியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் ரப்பர் பயிரிடுவதற்கு தொழிலாளர்கள் கிடைப்பது ஒரு சவாலாக உள்ளது. எனவே, அடுத்த இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு உலக அளவில் தேவைப்பாட்டை ஈடுகட்டும் அளவிற்கு ரப்பர் கிடைக்காது என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நடப்பு 2010-ஆம் ஆண்டில், சர்வதேச அளவில் 1.03 கோடி டன் ரப்பர் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ரப்பர் அளிப்பு இதைவிட குறைவாக 94.70 லட்சம் டன்னாக இருக்கும். வரும் 2011-ஆம் ஆண்டில், தேவைப்பாட்டைக் காட்டிலும் (1.10 கோடி டன்) ரப்பர் உற்பத்தி 13 சதவீதம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply