பொருளாதார மந்த நிலை, விசா கெடுபிடிகள், ஆஸ்திரேலியாவில் நிலவும் பாதுகாப்பற்ற நிலை போன்றவற்றால் ஐரோப்பிய நாடுகளில் ஒர் ஆண்டு எம்.பி.ஏ., படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.
தற்போது ஓர் ஆண்டு எம்.பி.ஏ., படிப்பு அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் வழங்கப்படும் பாரம்பரிய 2 ஆண்டு எம்.பி.ஏ., படிப்பைவிட மேலானது என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. ஒரு வருட எம்.பி.ஏ., படிப்பானது விரைவில் வேலை கிடைப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமையும் என்ற எண்ணமும் மேலோங்கியுள்ளது.
இதுகுறித்து வில்லியம் தவிலா என்ற கல்வியாளர், ‘இரண்டு வருட எம்.பி.ஏ., படிப்பு திறன்மிக்க வணிக நபர்களுக்கு தேவையாக இருக்கலாம். ஆனால் தற்போதைய தொழில் துறையினர் காலத்தின் அருமையும் அறிந்துள்ளனர். இந்த ஒரு வருட படிப்பில் பாடத்திட்டம் மிகவும் கடினமாக இருக்கும் என்று நினைக்க தேவையில்லை. நடைமுறை உலகிற்கு என்ன அவசியம் தேவையோ அது நிச்சயம் இருக்கும்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் ஒன்று முதல் ஒன்றரை வருடங்கள் முதுகலை பட்டம் படித்தவர்கள், பின்னர் இந்தியா சென்று அங்கே அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டப்படிப்பு ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். எனவே, ஒரு வருட படிப்பு அங்கீகாரம் இல்லாத படிப்பு என்று நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை’ என்றார்.
மேலும் அமெரிக்காவில் படிப்பதற்கும் ஐரோப்பாவில் படிப்பதற்கும் ஆகும் செலவில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. உலகப் புகழ் பெற்ற ஹார்வர்ட் அல்லது வார்டன் பல்கலைக்கழகத்திலோ சேர்ந்தால் கல்விக் கட்டணமாக மட்டும் 1.10 லட்சம் அமெரிக்கா டாலர்கள் செலுத்த வேண்டியிருக்கும். அதேசமயம் ஸ்பெயினில் உள்ள ஐ.இ., பிசினஸ் ஸ்கூல் அல்லது ஐ.என்.எஸ்.இ.ஏ.டி., போன்ற பிரபல கல்வி நிறுவனங்களில் மேலாண்மை கல்வி படிக்க 66 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் செலவிட வேண்டியிருக்கும்.
எனவே ஐரோப்பிய எம்.பி.ஏ., காலத்தை மட்டுமல்ல, செலவையும் மிச்சப்படுத்துகிறது. அதேசமயம் நிறுவனத்துக்கு நிறுவனம் கட்டணம் சிறிது மாறுபடலாம். எனவே அந்தந்த வலைதளங்களில் சென்று விவரங்களை தெரிந்து கொள்ளலாம். படிப்பிற்கு பின்னர் நல்ல வேலை கிடைக்கவே பலர் எம்.பி.ஏ., படிக்கிறார்கள். ஆனால் ஐரோப்பிய வணிக கல்வி நிறுவனங்களில் படித்த பிறகு வேலை அனுமதி கிடைப்பது கடினம் என்று பலர் நினைக்கிறார்கள். எனவே பிரிட்டன் அரசாங்கம் அந்நாட்டில் படித்தவர்களுக்கு இரண்டு வருட வேலை அனுமதி கொடுக்கிறது.
மேலும் படிக்கும் இடத்திலுள்ள மொழியை கற்றுக்கொண்டால், அந்த பகுதியிலுள்ள தொழில் நிறுவனமே உங்களை எளிதாக வேலைக்கு எடுத்துக் கொள்ளும். ஐரோப்பிய எம்.பி.ஏ., பட்டதாரிகளை பணியில் அமர்த்த பல நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. ஆனால் படிப்பிலும், பணியிலும் உங்களது குறிக்கோளுக்கு ஏற்ப எந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.
Leave a Reply