பெங்களூரு : கர்நாடகாவில் கட்சித் தாவும் அல்லது அரசுக்கு ஆதரவளிப்பதற்காக எம்.எல்.ஏ.,க்களிடம், 1984ல் இரண்டு லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டது.
தற்போது, 25 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.சமீபத்தில், ம.ஜ.த., வெளியிட்ட, “சிடி’யின் படி, ம.ஜ.த., எம்.எல்.ஏ., சீனிவாசுக்கு கட்சி மாறுவதற்கென, பா.ஜ., எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா, 25 கோடி ரூபாய் வரை விலை பேசியதாக தெரிந்தது.
கடந்த 26 ஆண்டுகளுக்கு முன், கர்நாடகாவை உலுக்கிய, “கட்சித் தாவலுக்கு கூலி’ ஊழலில், கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த பைரே கவுடா என்ற சுயேச்சை எம்.எல்.ஏ., அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் வீரப்ப மொய்லியிடம், காங்கிரசில் சேருவதற்கு இரண்டு லட்ச ரூபாய் வரை பேசியதாகவும், அந்த வகையில் காங்கிரசுடன் சேர்ந்து, ராமகிருஷ்ண ஹெக்டே அரசை கவிழ்க்கவும் திட்டமிட்டதாக கூறியுள்ளார்.
கட்சித் தாவல் தடை சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு ஓராண்டுக்கு முன், 1984 நவம்பரில், தனக்கும், மொய்லிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்த ஆடியோ கேசட்டை, பைரே கவுடா வெளியிட்டார்.”மொய்லி டேப் ஊழல்’ என்றே புகழ் பெற்ற இச்சம்பவத்தில், பிற்காலத்தில் தரம்சிங் அமைச்சரவையில் விவசாய அமைச்சராக பொறுப்பேற்ற பைரே கவுடா, மொய்லியை கப்பன் பார்க்கில் சந்தித்து, அவரது காரில் ஏறி சென்றார். சதாசிவ நகருக்கு சென்றடைந்த பின், அப்போதைய காங்கிரஸ் பொருளாளர் வீட்டுக்கு மொய்லி சென்றார். அங்கிருந்து முனிரெட்டிபாளையா செல்லும் வழியில், காரிலேயே முதல் முறை எம்.எல்.ஏ.,வான பைரே கவுடாவுக்கு இரண்டு லட்ச ரூபாய் அடங்கிய சூட்கேசை மொய்லி கொடுத்தார்.
பின்னர், பைரே கவுடா வெளியிட்ட ஆடியோ டேப்களில் காரில் சென்று கொண்டிருந்த போது, தனக்கும், மொய்லிக்கும் நடந்த பேச்சுவார்த்தை விவரம் உள்ளது என்று நிருபர்களிடம் தெரிவித்தார்.இச்சம்பவம் குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், என்.டி.வெங்கடேஷ் கமிஷன் தலைமையிலான விசாரணையில், இந்த டேப்பில் பேசியிருப்பது மொய்லி தான் என்பதை சரியான வகையில் உறுதி செய்ய முடியாததால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
Leave a Reply