சென்னை: ஐகோர்ட் தீர்ப்பையடுத்து, மேல் முறையீடு செய்த தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, கோவிந்தராஜன் குழு நேற்று அவசரமாக கூடி ஆய்வு செய்தது.
தமிழகத்தில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றுக்கு, அரசால் நியமிக்கப்பட்ட கோவிந்தராஜன் குழு, கடந்த மே மாதம் கட்டணத்தை நிர்ணயித்தது. குழு அறிவித்த கட்டணத்தை, 4,500 பள்ளிகள் ஏற்றுக் கொண்டன. ஆனால், 6,500 பள்ளிகள் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என, மேல் முறையீடு செய்தன.
இந்த விவகாரத்தில், பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்கள் கடந்த பிறகும், கட்டண நிர்ணயிப்பு குழு நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்தது. இந்நிலையில், ‘பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய போதிய கால அவகாசம் இல்லாததால், அடுத்த கல்வியாண்டில் புதிய கட்டணம் அறிவிக்கப்படும். அதுவரை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டணம் பொருந்தும்’ என, கோவிந்தராஜன் அறிவித்தார்.
இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில், கோவிந்தராஜன் கட்டணத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, பெற்றோர் அமைப்புகளும், அரசும் மேல் முறையீடு செய்ததில், இடைக்கால தடையை ரத்து செய்ததுடன், மேல் முறையீடு செய்த 6,500 பள்ளிகளுக்கும் நான்கு மாதங்களில் புதிய கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என, ஐகோர்ட் உத்தரவிட்டது.
ஐகோர்ட் தீர்ப்பு காரணமாக, புதிய கட்டணம் நிர்ணயிப்பு பணியை உடனே நிறைவேற்ற வேண்டிய நிலை, குழுவுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தீர்ப்பின் அம்சங்கள் குறித்து ஆராயவும், தீர்ப்பை அமல்படுத்துவதற்கான பூர்வாங்கப் பணிகள் குறித்து ஆராயவும், கோவிந்தராஜன் தலைமையில் குழு கூட்டம் டி.பி.ஐ., வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமாள்சாமி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் தேவராஜன் உள்ளிட்ட குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ஐகோர்ட் தீர்ப்பு விவரங்கள் குறித்து, இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக குழு ஆய்வு செய்தது. மேலும், புதிய கட்டண நிர்ணயிப்பு பணியை எப்போது துவங்குவது, அதில் யார், யாரை ஈடுபடுத்துவது என்பது உட்பட, பல்வேறு அம்சங்கள் குறித்து, குழு விரிவாக ஆய்வு நடத்தியது.
கோவிந்தராஜன், நிருபர்களிடம் கூறும்போது, ‘கட்டண விவகாரத்தில் ஐகோர்ட் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பு விவரங்களை முழுமையாக இன்று படித்துப் பார்த்தோம். அடுத்தடுத்து நடக்கும் கூட்டங்களில், மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றார்.
Leave a Reply