பொள்ளாச்சி : கோவையில் கடத்தப்பட்ட துணிக்கடை அதிபர் மகனின் சடலம், பொள்ளாச்சி அருகே பி.ஏ.பி., பிரதான வாய்க்காலில் இருந்து நேற்று மீட்கப்பட்டது.
கோவை துணிக்கடை அதிபர் ரஞ்சித்குமார் மகள் முஸ்கின் ஜெயின் (11), மகன் ரித்திக் ஜெயின் (8), இருவரும் கார் டிரைவரால் கடத்தப்பட்டு உடுமலை அடுத்த தளி பி.ஏ.பி., வாய்க்காலில் வீசப்பட்டனர். இதில், முஸ்கின் சடலத்தை வாவிபாளையம் அருகே பி.ஏ.பி., வாய்க்காலிலிருந்து நேற்று முன்தினம் போலீசார் மீட்டனர். ரித்திக்கின் சடலம் கிடைக்காததால், போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடும் பணிக்காக, பிரதான வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. சின்னபாப்பானூத்து பகுதியிலிருந்து கோமங்கலம் போலீசாரின் எல்லை துவங்குகிறது.
அங்கு துவங்கும் வாய்க்காலிலிருந்து சடலத்தை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். பொள்ளாச்சி – உடுமலை ரோட்டில் கெடிமேடு அருகே பி.ஏ.பி., பிரதான வாய்க்காலில் நேற்று காலை 11.40 மணிக்கு, நம்பிநாராயணன் என்பவர் பள்ளி சீருடை அணிந்த நிலையில் மாணவன் சடலம் மிதந்து வருவதைப் பார்த்துள்ளார். வாய்க்கால் மேடு வழியாக சடலத்தை, பைக்கில் பின் தொடர்ந்து வந்த அவர், தென்னை மட்டையைக் கொண்டு சடலத்தை தடுத்து, அருகில் உள்ளவர்களை அழைத்துள்ளார். வாய்க்காலுக்கு அருகிலுள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாரிமுத்து, கனகராஜ், செந்தில்குமார் ஆகியோர், அரைமணி நேர போராட்டத்திற்குப் பின், பகல் 12.20 மணிக்கு சடலத்தை வெளியே மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கோமங்கலம் போலீசார், மாணவன் சடலத்திலிருந்த அடையாளங்களை குறித்து கொண்டு, கோவை போலீஸ் கமிஷனருக்கும், மாணவரின் உறவினருக்கும் தகவல் தெரிவித்தனர். கமிஷனர் சைலேந்திரபாபு, அங்கு வந்து சடலத்தை பார்வையிட்டு, மீட்டவர்களிடம் விசாரித்தார். அதன்பின், கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
போலீசார் கூறியதாவது: சின்னப்பாப்பனூத்து பகுதியிலிருந்து குண்டலப்பட்டி அருகே வரும் வழியில் வாய்க்கால் குறுகி இருப்பதோடு, புதர் அதிகளவில் வளர்ந்திருக்கும். வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தியதும், புதரின் இடையில் சடலம் சிக்கியிருக்க வாய்ப்புள்ளது. வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால், நீரின் வேகத்தில் புதரில் சிக்கியிருந்த சடலம் அடித்து வந்திருக்கலாம், என்றனர். ரித்திக்கின் சடலத்தை மீன் அரித்ததால் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது. கை, காலில் தோலுரிந்த நிலையிலும், கண்களிலிருந்து ரத்தம் வடிந்தும் காணப்பட்டது. மூன்று நாட்களாக தண்ணீரில் சடலம் ஊறியதால், அழுகத் துவங்கியது.
Leave a Reply