போரூர்: “”தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோரின் உயிரை காப்பாற்றும் வகையில், செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ காப்பீட்டு திட்டம் என்னை நம்பியோ, அரசாங்கத்தை நம்பியோ இல்லை. டாக்டர்களை நம்பித் தான் உள்ளது,” என்று, முதல்வர் கருணாநிதி பேசினார்.
போரூர் ராமச்சந்திரா பல்கலையின் வெள்ளி விழா கொண்டாட்டம் நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதி பேசியதாவது: ராமச்சந்திரா பல்கலைக் கழக கல்லூரி, மருத்துவமனை, மருத்துவ வளாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் வசம் வந்தது. பின்னர் அதை திருப்பி கொடுத்துவிட்டோம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் இந்த பல்கலை மருத்துவமனை அரங்கில் நோயாளியாக சிகிச்சை பெற்றுள்ளேன். இங்குள்ள டாக்டர்களை நான் மறந்தாலும், மர நிழலை மறக்க முடியாது. இங்குள்ள பேராசிரியர் மார்த்தாண்டம், தணிகாசலம் ஆகியோர் நான் சிகிச்சை பெற வந்தபோது, எனக்கு தைரியமூட்டும் வகையில் பேசினர். நான் அதிகாலை 2 மணிக்கு தீராத முதுகுவலியில் இங்கு வந்தபோது டாக்டர்கள் ஸ்கேன் எடுப்பதற்காக என்னை அழைத்துச் சென்றனர். அப்போது எனக்கு ஏற்பட்ட வலியில் உரக்க நான் கத்தியது இன்றைக்கும் மருத்துவமனையில் எதிரொலிக்கும். அப்போது எனக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து, என் இயக்கத்தினரின், குடும்பத்தினரின், நண்பர்களின் கலக்கத்தை போக்கிய மருத்துவமனை தான் இந்த ராமச்சந்திரா மருத்துவமனை.
தமிழகத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பெரிய நோய்கள் எல்லாம் தீர்க்கப்படுகின்றன. இன்றைக்கு ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, காப்பீட்டு திட்டத்தின் மூலம் உயிர்பிழைத்த, இந்த குழந்தைகளை பார்த்த போது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதுபோன்ற ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரை காப்பாற்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இந்த அரசு முயற்சி எடுத்திருக்கிறது என்றால், அது என்னை நம்பியோ, அரசாங்கத்தை நம்பியோ இல்லை. டாக்டர்களை நம்பித்தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பல்கலை தொடர்ந்து பொன் விழா, நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
Leave a Reply