தமிழக மக்களை ஏமாற்றுகிறார் கருணாநிதி: ஜெ., பாய்ச்சல்

posted in: அரசியல் | 0

சென்னை : காவிரி பிரச்னையில், முன்கூட்டியே சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், தண்ணீர் திறந்துவிட முடியாது’ என கர்நாடக அரசு கைவிரித்தவுடன், “சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என கருணாநிதி அறிவித்திருப்பது, தமிழக மக்களை ஏமாற்றும் செயல் என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை: வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும் என்பது பழமொழி. வெள்ளம் வந்த பிறகு அணை போட வேண்டும் என்பது கருணாநிதியின் புதுமொழி. சம்பா சாகுபடியை பாதுகாக்கும் விதமாக, முன்கூட்டியே சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், கடிதம் எழுதி காலத்தைக் கழித்து விட்டார். “தண்ணீர் திறந்துவிட முடியாது’ என கர்நாடக அரசு கைவிரித்தவுடன், “சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என கருணாநிதி அறிவித்திருப்பது, தமிழக மக்களை ஏமாற்றும் செயல். கருணாநிதியின் எண்ணமெல்லாம், “கை’யுடனான தன் உறவைப் பாதுகாப்பதில் தான் இருக்கிறதே தவிர, தமிழர்களின் உரிமையைக் கேட்டுப் பெறுவதில் இல்லை. தி.மு.க., அரசு அமைந்த பிறகு 2007 பிப்ரவரியில் காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை அளித்தது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், இந்த தீர்ப்பை மத்திய கெஜட்டில் வெளியிடவோ, இறுதித் தீர்ப்பில் பரிந்துரைத்தபடி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்கவோ தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், 1991ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தனது இடைக்கால தீர்ப்பை வழங்கியபோது, ஆறே மாதத்தில் அதை மத்திய கெஜட்டில் வெளியிட நடவடிக்கை எடுத்தேன்.

அனைத்து கட்சிக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களைச் சந்தித்த கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை, “தமிழக அரசு எவ்வளவு தண்ணீர் வேண்டுமென கேட்கவில்லை’ எனக் கூறியிருப்பதாக செய்தி வந்துள்ளது. இதிலிருந்தே, ஏதோ எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறாரே என்பதற்காக கருணாநிதி கடிதம் எழுதியிருப்பது தெரிகிறது. கூட்டணி உறவு நீடிக்கவும், ஊழல் குற்றங்களில் இருந்து தப்பிக்கவும், வளம் கொழிக்கும் இலாகாக்களைப் பெறவும், காங்கிரஸ் தலைவரையும், பிரதமரையும் சந்திக்கிறார் கருணாநிதி. ஆனால், காவிரியில் நமக்குள்ள உரிமையைப் பெறுவதற்காக ஏன் இவர்களைச் சந்திக்க மாட்டேன் என்கிறார்?

எனது ஆட்சிக் காலத்தில், காவிரி நீரைப் பெறுவதற்காக நான்கு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினேன்; முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டுமாறு பல முறை பிரதமரை வலியுறுத்தியிருக்கிறேன். இதுதவிர, சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடி, கர்நாடகாவிடமிருந்து தண்ணீரைப் பெற்று இருக்கிறோம். ஆனால், இப்போது கடிதம் எழுதவே தயங்குகிறார் கருணாநிதி. நான்கரை ஆண்டுகளில் காவிரிக்காக ஏதாவது போராட்டம் நடத்தியிருக்கிறாரா? பிரதமரைச் சந்தித்து முறையிட்டிருக்கிறாரா? எதையும் செய்யவில்லை. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, ஜூனில் 10 டி.எம்.சி., தண்ணீரையும், ஜூலையில் 34 டி.எம்.சி., ஆகஸ்ட் 50 டி.எம்.சி., செப்டம்பர் 40 டி.எம்.சி., அக்டோபர் 22 டி.எம்.சி., என மொத்தம் 156 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகா திறந்து விட்டிருக்க வேண்டும்; ஆனால், செய்யவில்லை.

நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படியோ, இறுதித் தீர்ப்பின்படியோ கர்நாடகத்திடம் தண்ணீரைப் பெற கருணாநிதி என்ன நடவடிக்கை எடுத்தார்? கடிதம் எழுதியதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, கர்நாடகத்திடமிருந்து சம்பா சாகுபடிக்குத் தேவையான காவிரி நீரைப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *