ஹைதராபாத்திலுள்ள நல்சார் சட்டப் பல்கலைக்கழகம், வரும் 2011 -12 கல்வியாண்டு முதல், 4 புதிய படிப்புகளை அறிமுகப்படுத்துகிறது.
வணிகச் சட்டம் மற்றும் நிர்வாகத்தில் முதுநிலை படிப்பு, ஒப்பந்த நிர்வாகம் மற்றும் ரியல் எஸ்டேட் மேலாண்மையில் பட்ட டிப்ளமோ படிப்பு, தகவலறியும் உரிமை மற்றும் நிர்வாகம் மற்றும் மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தை உரிமைகள் ஆகிய இரண்டு முதுநிலை டிப்ளமோ படிப்பு என நான்கு புதிய படிப்புகளை வழங்க உள்ளது.
’திறமையான மாணவர்களின் அறிவுத்திறனை வளர்ப்பதற்காகவே இந்த புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன’ என பல்கலைக்கழக துணைவேந்தர் வீர் சிங் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: இந்த பல்கலைக்கழகம் ஏற்கனவே 5 வருட பிஏ.பிஎல்(ஹானர்ஸ்) பட்டப் படிப்பு, 2 வருட எல்.எல்.எம் படிப்பு போன்றவைகளுடன் சேர்த்து, வெளியிலிருந்து படிக்கும் மற்றும் இணையதளத்தில் படிக்கும் வகையில் காப்புரிமை சட்டத்தில் முதுநிலை டிப்ளமோ, சைபர் சட்டங்கள், மீடியா சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்களில் முதுநிலை டிப்ளமோ போன்ற படிப்புகளை வழங்கி வருகிறது.
ஆந்திரப்பிரதேச அரசானது, ’சாலை பாதுகாப்பு அதிகாரம்’ மற்றும் ’ஆந்திரப்பிரதேச பொது சுகாதாரம்’ போன்ற விஷயங்களின் சட்ட முன்வரைவை தயாரிக்கும் வாய்ப்பை நல்சார் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியுள்ளது. இதுதவிர, மத்திய அரசு ’மாற்று திறனாளிகள்’ சம்பந்தமான ஒரு சட்ட முன்வரைவையும் தயாரிப்பதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.
மேலும் நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களில் ஒருவரான ஸ்ரேயா ஆட்ரே, 2011ம் ஆண்டுக்கான கௌரவம் வாய்ந்த ரோட்ஸ் உதவித்தொகைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் இந்த உதவித்தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 5 மாணவர்களில் இவரும் ஒருவர். இவர் இளநிலை சிவில் சட்டப் படிப்பை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க உள்ளார். இவ்வாறு துணைவேந்தர் கூறினார்.
Leave a Reply