பொறியியல் படிக்காத மாணவர்களுக்கு ஐ.ஐ.எம்., சேர்க்கையில் சலுகை

posted in: கல்வி | 0

லக்னோ ஐ.ஐ.எம்.,ல் இதர கலை மற்றும் வணிக மாணவர்களையும் சமமான அளவில் சேர்க்கும்பொருட்டு, அம்மாணவர்களுக்கு 2 .5 புள்ளிகள் கூடுதல் ‘வெய்ட்டேஜ்’ வழங்கப்படுகிறது.

லக்னோ இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் முதுநிலை சேர்க்கைக்கான கொள்கை அமைப்பில் இந்த விதி சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கலை, வணிகம் மற்றும் இதழியல் படிப்புகளை இளநிலை படிப்பில் முடித்தவர்கள் லக்னோ இந்திய மேலாண்மை கழகத்தில் அதிக இடங்களை பெறமுடியும்.

தங்கள் கல்வி நிறுவனத்தில் பலதரப்பட்ட மாணவர்களை அதிகளவில் பெறுவதற்காகவே இந்த சலுகை முறை அமல்படுத்தப்பட்டிருப்பதாக அந்நிறுவன சேர்க்கை கமிட்டியின் தலைவர் ஹிமான்ஷு ராய் கூறினார்.

மேலும் அவர், ‘தற்போதைய நிலையில், அந்நிறுவன மாணவர்களில் 85 சதவிகிதம் பேர் பொறியியல் பின்னணியுடையவர்கள், 15 சதவிகிதம் மட்டுமே வேறு படிப்புகளை படித்தவர்கள். 50 புள்ளிகள் கொண்ட மொத்த வெய்ட்டேஜில், சிறப்பு வெய்ட்டேஜாக 2 .5 புள்ளிகள் பொறியியல் பின்னணி அல்லாத மாணவர்களுக்கு வழங்கப்படும்.

பொறியியல் அல்லாத இதரப் பிரிவானது மானுடவியல், நுண்கலை(நடனம், இசை, வர்ணம் பூசுதல்), வரலாறு, இலக்கியம், தத்துவம், தொல்பொருளியல், மொழிகள், நூலக அறிவியல், வணிகம்/பொருளாதாரம், சார்டர்ட் அக்கவுண்டன்சி, கம்பெனி செக்ரடரிஷிப், கல்வி(உடற்கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட), சட்டம், மருத்துவம் மற்றும் பார்மகாலஜி போன்ற துறைகளைக் கொண்டதாகும்.

மேலும் மேற்கண்ட படிப்பில் ஒன்றை படித்த ஒரு மாணவருக்கு பணி அனுபவம் இருந்தாலும் அவருக்கு அந்த கூடுதல் 2 .5 புள்ளிகள் வழங்கப்படும். ஒரு பொறியியல் மாணவர் தனது முதல் மதிப்பெண்ணாக 100 % கொண்டிருக்கலாம். அதேசமயம் ஒரு சார்டர்ட் அக்கவுண்டன்ட் மாணவர் தனது முதல் மதிப்பெண்ணாக 65 % கொண்டிருக்கலாம்.

இத்தகைய வித்தியாசத்தால், பொறியியல் தவிர்த்த பிற பாடங்களை படித்த மாணவர்கள் இந்திய மேலாண்மை கழகத்தில் சேர்வது தடைபடுகிறது. எனவே இந்த கூடுதல் வெய்ட்டேஜின் மூலம் அவர்கள் அதிகளவில் இந்த உயர்கல்வி நிறுவனத்தில் சேர முடியும். உயர்தர மேலாண்மை படிப்பில் பலதரப்பட்ட படிப்பு பின்னணியைக் கொண்ட மாணவர்கள் இருந்தால்தான், மேலாண்மை படிப்பில் புதிய பரிணாமம் ஏற்படும்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *