மும்பை : வங்கிகள், கடந்த ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கி உள்ளன. இந்த கடன் வசூலாகாத நிலை ஏற்பட்டால் வரும் 2011-12-ஆம் நிதி ஆண்டில், பொதுத்துறை வங்கிகளின் வரிக்கு முந்தைய லாபம் குறைய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
ரியல் எஸ்டேட் துறையில் எழுச்சி ஏற்பட்டிருந்ததால், கடந்த 2005-06 மற்றும் 2009-10-ஆம் நிதி ஆண்டுகளுக்கிடையில் வங்கிகள், ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களுக்கு வழங்கிய கடன் ஆண்டிற்கு சராசரியாக 40 சதவீதம் அதிகரித்து வந்துள்ளது. இந்த நான்கு நிதி ஆண்டுகளில் வங்கிகள், இத்துறைக்கு மொத்தம் ரூ.95,700 கோடி கடன் வழங்கி உள்ளன. இதில் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு வழங்கிய கடன் 22 சதவீதம் என்ற அளவில் குறைவாக உள்ளது. எஞ்சியுள்ள 78 சதவீத கடன் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் அமைப்புச் சாராத நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரியல் எஸ்டேட் நடவடிக்கைகளில் எதிர்பார்த்த அளவிற்கு விறுவிறுப்பு ஏற்படாவிட்டால், இத்துறை நிறுவனங்களால் உரிய காலத்தில் கடன்களை திரும்ப அளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து எச்.டீ.எஃப்.சி. செக்ஹீரிட்டீஸ் நிறுவனம், வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் ‘ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடனில் 10 சதவீதம் வசூலாகாத கடனாக மாறினால், வரும் 2011-12-ஆம் நிதி ஆண்டில் வங்கிகள் ஈட்டும் வரிக்கு முந்தைய லாபத்தில் 18 சதவீத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் நிகர சொத்து மதிப்பில் 2 சதவீத சரிவு ஏற்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியால், வர்த்தக வாய்ப்புகள் அதிக அளவில் உருவாகும் என்ற நம்பிக்கையில், பல முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மும்பை போன்ற பெரிய நகரங்களில் நிலங்களை மிகவும் அதிக விலைக்கு வாங்கி உள்ளன. இதனையடுத்து வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் விலை மிகவும் உயர்ந்துள்ளது. தற்போது இவற்றின் விலை பெரிய நகரங்களில் ரியல் எஸ்டேட் துறையில் எழுச்சி ஏற்பட்டிருந்த காலத்திற்கு நிகராக 25-40 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் வீடுகள் விற்பனை குறையலாம் என்ற அச்சப்பாடு நிலவி வருகிறது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில் வங்கிகள், வீட்டு வசதிக்கு வழங்கிய கடன், சென்ற ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 10.8 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 2.7 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. ஆக, வங்கிகள் பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்து வரும் நிலையிலும், வீட்டுக் கடன் வாங்குபவர்கள் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவிற்கு அதிகரிக்கவில்லை.
Leave a Reply