மூவாற்றுப்புழா : பயங்கரவாதிகளால் பேராசிரியரின் வலது கை மணிக்கட்டு பறிபோன நிலையிலும், சிகிச்சைக்கு பிறகு, தீவிர பயிற்சியால் மீண்டும் எழுதத் துவங்கியுள்ளார்.
கேரள மாநிலம் தொடுபுழா நியுமேன் கல்லூரி, மலையாள மொழித் துறை பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டி.ஜெ.ஜோசப். இவர் தயாரித்த வினாத்தாளில், குறிப்பிட்ட சமுதாயத்தினரின் மனம் புண்படும்படி வினா இருந்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில், ஜூலை 4ம் தேதி அதிகாலை, குடும்பத்துடன் காரில் சர்ச்சுக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது, மர்மக் கும்பல் வழிமறித்து, அவரது வலது கை மணிக்கட்டு பகுதியை வெட்டி வீசி, வேனில் தப்பியது. எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, துண்டிக்கப்பட்ட பகுதி மீண்டும் வலது கையுடன் இணைக்கப்பட்டது.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவருக்கு, அதிர்ச்சி காத்திருந்தது. அவரை கல்லூரி நிர்வாகம், “சஸ்பெண்ட்’ செய்ததோடு, துறை ரீதியாக விசாரணை நடத்தி பணியில் இருந்தும் நீக்கியது. இருப்பினும், அவர் மனந்தளராமல் வலது கையை பழைய நிலைக்கு கொண்டு வர, தீவிர முயற்சியில் ஈடுபட்டார்.
தற்போது அவர், வலது கையால் மெதுவாக எழுத பயிற்சி எடுத்து வருகிறார். “ஹரி ஸ்ரீ கணபதயே நம’ என எழுதத் துவங்கியதும், அவரது மனம் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அவரது சகோதரி மேரி ஸ்டெல்லா, அவருக்கு எழுத மிகவும் உதவி வருகிறார். தீவிர பயிற்சி காரணமாக, நோட்டு புத்தகத்தின் மூன்று பக்கங்களை நிரப்பி விட்டார். அவருடைய கடும் முயற்சி, இன்னும் தொடரும் என நம்பிக்கையுடன் கூறி வருகிறார் பேராசிரியர்.
Leave a Reply