தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. முதல் நாள் கூட்டத்தில் மறைந்த எம்.எல்.ஏ.க்கள் சுதர்சனம், ஜெயபால் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. பின்னர் சபை ஒத்திவைக்கப்படுகிறது.
இந்த கூட்டத்தொடரில் அரசு ஏற்கனவே பிறப்பித்த 4 அவசர சட்டங்களுக்கான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, சட்டங்களாக நிறைவேற்றப்படுகின்றன. இதில், தமிழ் வழியில் கல்வி கற்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டம் முக்கியமானது.
இது தவிர சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அங்கீகரமற்ற கட்டிடங்களை இடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் ஒருவருடம் நீடிப்பது, நகராட்சிப் பகுதிகளில் சொத்துக்களை பரிமாற்றம் செய்வதற்கான வரி விதிப்பு சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் இரண்டாவது சட்ட திருத்தம் ஆகிய அவசர சட்டங்களும், சட்ட வடிவம் பெறுகின்றன.
8-ந்தேதி காலை கூட்டம் முடிந்ததும் அலுவலாய்வு குழு கூடுகிறது. இதில் குளிர்கால சட்டமன்ற கூட்டத்தொடர் எத்தனை நாள் நடக்கும் என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது. 12-ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று தெரிகிறது.
அப்போது 4 அவசர சட்ட மசோதாக்களும் சட்டங்களாக நிறைவேற்றப்படுகிறது. காங்கிரஸ் சட்டசபை கட்சி தலைவராக இருந்த சுதர்சனம் மரணம் அடைந்துவிட்டதால், இந்த கூட்டத்தொடரில் அந்த கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுகிறார்.
Leave a Reply