அடிப்படை கணிதம் கூட தெரியாத பொறியியல் மாணவர்கள்!

posted in: கல்வி | 0

சென்னை: பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட அடிப்படை கணிதத் தேர்வில், பெரும்பாலான மாணவர்கள் அடிப்படை விஷயங்களில் கூட பின்தங்கியிருப்பது தெரிந்துள்ளது.

தமிழகத்தில் 474 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. பொறியியல் படிப்பில் நான்கு ஆண்டுகளிலும் சேர்த்து ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பொறியியல் மாணவர்களுக்கு கணிதம் முக்கியப் பாடமாக கருதப்படுகிறது. பொறியியல் மாணவர் சேர்க்கையின்போது, தர நிர்ணயத்திற்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதிலும் கணிதத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

200 கட் – ஆப் மதிப்பெண்ணில், 100 மதிப்பெண் பிளஸ் 2 கணிதப் பாடத்தில் பெற்ற மதிப்பெண்ணிற்கு ஒதுக்கப்படுகிறது. தமிழக பொறியியல் கல்லூரி ஒன்றில், இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவர்களின் கணிதத் திறனை கண்டறிய, சோதனை கணிதத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் மேட்ரிக்ஸ், பிராக்சன், டிரிக்னாமெட்ரி, அல்ஜிப்ரா உள்ளிட்ட அடிப்படை கணிதக் கேள்விகள் கேட்கப்பட்டன. இத்தேர்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் குமார் ஜெயந்த் கூறியதாவது: கல்லூரியில் உள்ள 503 மாணவர்களில், 32 பேர் பூஜ்யம், 154 பேர் ஐந்து மதிப்பெண்ணிற்குக் கீழ், 241 பேர் 5 முதல் 10 மதிப்பெண்ணிற்குள், 70 பேர் 11 முதல் 15 மதிப்பெண்ணிற்குள், ஆறு மாணவர்கள் 15 மதிப்பெண்ணிற்கு மேல் பெற்றுள்ளனர்.

கல்லூரியில் உள்ள 503 மாணவர்களில், 70 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 200க்கு 180 மதிப்பெண்ணிற்கு மேல் பெற்றுள்ளனர். இவர்களில் ஏழு மாணவர்கள் பூஜ்யம் பெற்றுள்ளனர். மேலும் 14 பேர் ஐந்து மதிப்பெண்ணிற்குக் கீழ், 33 பேர் 5 முதல் 10 மதிப்பெண்ணிற்குள், 14 பேர் 11 முதல் 15 மதிப்பெண்ணிற்குள், இருவர் 15 மதிப்பெண்ணிற்கு மேல் பெற்றுள்ளனர். இத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் அடிப்படையானவை.

பிளஸ் 2 பொதுத் தேர்வில், கணிதத்தில் 180க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் கூட இந்த அடிப்படை கணிதக் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவர்கள் மனப்பாடம் செய்து பதிலளிப்பதால், கணிதத்தை புரிந்து படிப்பதில்லை. இதற்காக பொறியியல் மாணவர்களுக்கு அதிக நேரம் ஒதுக்கி கணிதம் சொல்லித்தரப்படவுள்ளது. இவ்வாறு குமார் ஜெயந்த் கூறினார்.

இத்தேர்வு முடிவுகள், பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணிற்கும், அவர்களது உண்மையான கணித அறிவுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசத்தை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இதையடுத்து, பள்ளி பொதுத் தேர்வு முறையில் கணிசமான அளவு மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் உயர் கல்வித்துறை வட்டாரத்தில் எழுந்துள்ளது.

கணித அறிவு முழுமையாக இல்லாமல், பொறியியல் படிப்பை முடித்து வெற்றி பெற்றாலும், வெற்றிகரமான பொறியாளர்களாக சாதிப்பது கடினம் என்றும் பொறியியல் கல்வி வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *