அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் “ஸ்மார்ட் கிளாஸ்” தொடங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் லால்குடியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு மேலாக அரசு பள்ளிகளில், உள் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தொடுதிரை கணினி மூலம் மாணவர்கள் கல்வி பெறும் “ஸ்மார்ட் கிளாஸ்” திட்டம் சோதனை முயற்சியாக தமிழகத்தில் 6 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் வெற்றி மற்றும் நடைமுறை பிரச்சினைகள் குறித்து ஆலோசித்து வருகிற கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கிளாஸ் பற்றிய திட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி திட்டத்தை பொறுத்தவரை கடந்த கல்வியாண்டில் முதல் மற்றும் 6-ம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தப்பட்டது. வருகிற 10-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதற்காக புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து வகுப்புகளுக்கும், சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்துவதால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
வணிகவியல், பொருளாதாரம் படித்த ஆசிரியர்கள் நியமனத்தில் இருக்கும் தாமதம் என்பது அரசின் நிதி ஆதாரம் குறித்து எடுக்கப்பட்ட முடிவாகும். மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பள்ளிகளில், நீதி போதனை வகுப்பின்போது மற்ற பாடங்களை நடத்தப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
Leave a Reply