ஆட்சிக்கு சுயஉதவிக் குழு பெண்கள் உதவ வேண்டும்:சுழல்நிதி வழங்கிய துணை முதல்வர் வேண்டுகோள்

posted in: அரசியல் | 0

சென்னை:””சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்குவதில், இதுவரை 100 மணி நேரம் செலவு செய்துள்ளேன்,” என, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது.தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கோபால் வரவேற்றார். சென்னையில் 2,900 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 15 கோடியே 70 லட்ச ரூபாய், 100 நபர்களுக்கு மானியத்துடன் கூடிய தனி நபர் கடனுதவியாக 20 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயை துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:சமூகநலத் துறையில் மகளிர் சுயஉதவிக் குழு இருந்தது. ஐந்தாவது முறையாக முதல்வர் கருணாநிதி பொறுப்பேற்றதும் மகளிர் சுயஉதவிக் குழு, ஊரக வளர்ச்சிச் துறைக்கு மாற்றப்பட்டது. சுழல்நிதி, வங்கிக் கடன் ஊரக பகுதிகளில் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. இப்போது நகர பகுதிகளிலும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.ஈரோட்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நிதி வழங்கிய நிகழ்ச்சியுடன் 99 அரை மணி நேரத்தை செலவு செய்துள்ளேன். இந்நிகழ்ச்சியுடன் சதம் அடிக்கப் போகிறேன். சுயஉதவிக் குழுக்கள் அரசியலுக்காக, கட்சிக்காக, தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்படும் குழுக்கள் அல்ல.பெண்கள் சுயமாக சிந்திக்க வேண்டும். சுயமாக வாழ்க்கை நடத்த வேண்டும். சுயமரியாதையுடன் வாழ வேண்டும். பெண்கள் தனது சொந்த காலில் நிற்கும் சூழல் பெற வேண்டும்.

யாருடைய தயவும் எதிர்பார்க்கக் கூடாது என்பதற்காகவே சுயஉதவிக் குழு துவக்கப்பட்டது. தமிழகத்தில் தான் 99 சதவீதம் பெண்கள் வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தியுள்ளனர் என, வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால் தான், வங்கிகள் போட்டிப் போட்டுக் கொண்டு கடன் வழங்குகின்றன. இது சுயஉதவிக் குழுக்களுக்கு மட்டுமல்ல பெருமை; ஒட்டு மொத்த தமிழகத்திற்கு கிடைத்த பெருமை.தமிழகத்தின் தலைமைச் செயலராக பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மாலதியும், டி.ஜி.பி.,யாக லத்திகாசரணும் பணியாற்றி வருகின்றனர். சுயஉதவிக் குழுக்களில் உள்ள பெண்கள் இந்த ஆட்சிக்கு துணை புரிய வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.விழாவில் மேயர் சுப்ரமணியன், தலைமைச் செயலர் மாலதி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அரசு முதன்மைச் செயலர் அலாவுதீன் பேசினர். சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *