இளைஞர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினாரா ஒபாமா?

posted in: கல்வி | 0

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகை, குறிப்பாக இளைஞர்களிடம் மிகப்பெரிய எதிபார்ப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதை நாம் அறிவோம்.

ஏனெனில் அதிபர் பதவிக்கான பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டபோதே, அவுட்சோர்சிங் துறையில் கட்டுப்பாடு கொண்டுவரப்படும் என்றார். அதிபராக பதவியேற்ற பிறகு, இந்தியாவை பாதிக்கும் விதத்தில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் கொண்டு வந்தார். ஆனால் அது தோல்வியடைந்தது. மேலும் இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக கல்விப்போர் நடத்தப்படும் என்று அறிவித்தார். சீனாவோடு சேர்த்து இந்தியாவையும், அமெரிக்காவிற்கு போட்டியாக உருவாகும் சக்தி என்று வர்ணித்தார்.

அவரது இத்தகைய தொடர்ச்சியான கருத்துக்களால், அவரது இந்திய வருகை, நம் நாட்டு இளைஞர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அவரது வருகை இந்தியாவிற்கு எந்தளவு நன்மையைக் கொண்டுவரும் என்ற விவாதங்கள் இளைஞர்கள் மத்தியில் பரவலாக நடந்துகொண்டிருந்த நிலையில், ஒபமாவும் அவரது மனைவி மிச்சேல் ஒபாமாவும் இந்தியா வந்து சென்று விட்டனர். அந்த வருகையின் சில குறிப்பிடத்தக்க அம்சங்களை நாம் இங்கே காணலாம்.

மும்பையில் ஒபாமா தம்பதிகள்:
மும்பையிலுள்ள புனித சேவியர் கல்லூரியில், அக்கல்லூரி மாணவர்களிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்துகொண்டார். அப்போது அவர் ‘நீங்கள்தான் வருங்கால தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர்கள். 100 கோடி மக்கள்தொகைக்கு மேல் உள்ள நாட்டில், பாதிக்கும் மேற்பட்டோர் 30௦ வயதுக்கு கீழானவர்கள் என்பது ஒரு அசாதாரணமான விஷயம். இதனால் எதையும் சாதிக்க முடியும் என்ற நிலை ஏற்படுகிறது. இந்த நாட்டின் எதிர்காலமே மாணவர் சமுதாயத்தின் கைகளில்தான் உள்ளது. எனவே ஒவ்வொரு குழந்தைக்கும் மேன்மையான வாழ்க்கை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்‘ என்றார்.

மேலும் வர்த்தக கூட்டத்தில் பேசிய அவர், ‘கடந்த 20 ஆண்டுகளில் உலகம் மிகவும் மாறியுள்ளது மற்றும் அந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் வளர்ச்சியும் ஆச்சர்யப்படத்தக்கதாக உள்ளது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது. இந்தியா ஒரு வளரும் நாடல்ல. அது ஒரு வளர்ந்த நாடு. இந்த தாராளமயமாக்கல் யுகத்தில், இரு நாடுகளும் பொருளாதார விஷயங்களில் இணைந்து செயல்பட அதிக சாத்தியங்கள் உள்ளன. இதன்மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாவதோடு, வணிகத்தில் புதிய வாய்ப்புகளும், முதலீடுகளும் உண்டாகும். அமெரிக்க சந்தையை நாங்கள் இந்தியா மற்றும் பிறநாட்டு நிறுவனங்களுக்காக வெளிப்படையாக திறந்து வைத்திருக்கிறோம். அதேபோல் இந்தியாவும் தனது சந்தையை அமெரிக்க நிறுவனங்களுக்காக வெளிப்படையாக திறந்துவைக்க வேண்டும்‘ என்றார்.

மும்பையில் காப்பக குழந்தைகளை சந்திக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருமதி. மிச்செல் ஒபாமா, அக்குழந்தைகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், ‘நாம் மிகவும் அதிர்ஷ்டக்காரர்கள். கல்வி நமக்கு மிகவும் முக்கியமானது. கல்வியின் மூலமாக மட்டுமே ஒருவர் வாழ்க்கையின் உயரத்தை அடைய முடியும். எனது வாழ்க்கை பயணம் சுலபமாக இருக்கவில்லை. நான் இன்று இருக்கும் நிலையை கல்வியின் மூலமாகவே அடைந்தேன்‘ என்றார்.

மேலும் மும்பையிலுள்ள மணி பவனுக்கு (மகாத்மா காந்தி மியூசியம் – ஆராய்ச்சி மையம்) தனது கணவருடன் சென்ற மிச்செல் ஒபாமா, ‘ இந்த வருகை என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். காந்தியின் வாழ்வுமுறை மற்றும் கொள்கைகள் நமது குழந்தைகளிடமும், ஒட்டுமொத்த உலகிலும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும்‘ என்றார்.

டெல்லியில் ஒபாமா:
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் டெல்லியில் வெளியிட்ட கூட்டறிக்கையில் பல முக்கிய அம்சங்களை தெரிவித்தனர்.

அவை, ‘பன்முக கலாச்சாரத்தை பகிர்ந்து கொள்ளுதல், கல்வி, தொழில், கண்டுபிடிப்பு ஆகியவற்றின் மூலம் இருநாட்டு அரசாங்கங்கள், மக்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவியல்பூர்வமான நிறுவனங்கள் ஆகியவற்றுக்கிடையிலான ஒத்துழைப்பால் இருநாட்டு மக்களும் பயனடைகிறார்கள்‘ என்ற தலைவர்கள், பாதுகாப்பான மற்றும் நீடித்த உலகம், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு, பரஸ்பர நன்மையை அதிகரித்தல் மற்றும் உலகளாவிய பொருளாதார மேம்பாடு, நீடித்த வளர்ச்சியை ஆதரிப்பது, பொருளாதார மேம்பாட்டு ஆதரவில் உலக தலைமைத்துவத்தை நிர்வகிப்பது, வெளிப்படையான அரசாங்கம் மற்றும் ஜனநாயக மதிப்பீடுகள் போன்ற விஷயங்களில் இந்தியா-அமெரிக்கா இடையே தீவிரமான ஒத்துழைப்பை ஏற்படுத்துவது என்று இருநாடுகளும் முடிவெடுத்துள்ளன‘ என்றனர்.

‘இந்தியா ஒரு பிராந்திய மற்றும் உலக சக்தியாக வளர்ந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளது‘ என்று ஒபாமா கூற, இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ‘இருநாடுகளுக்கிடையிலான வணிகம் தற்போது வலுவடைந்து வருகிறது. நமது நாட்டு பொருளாதாரம் பெரியளவில் வளர்ந்து வருகிறது. அமெரிக்காவில் அதிகளவு முதலீடு செய்யும் நாடுகளில் இந்தியாவும் முக்கியமான ஒன்று. நம் முதலீடு அமெரிக்க பொருளாதாரத்திற்கு பெரியளவில் உதவிபுரிகிறது. மேலும் நமது வணிகம் மற்றும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவின் முதலீட்டை நாம் பெருமளவில் வரவேற்கிறோம்‘ என்றார்.

இதைத்தவிர அமெரிக்காவுடனான கல்வி ஒப்பந்தம் குறித்து கூறிய அவர், ‘கல்வித்துறையில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பு சிறந்த பயன்விளைவுகளைத் தரும். ஏனெனில் இந்தியா – அமெரிக்கா ஒத்துழைப்பு தவிர, உலகில் கல்வியில் வேறு எந்த இருநாட்டு ஒத்துழைப்பும் இல்லை. இந்த நிலையில் மற்ற நாடுகள் இல்லை. தற்போது ஏறக்குறைய ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படித்து வருகிறார்கள். இந்த இருநாடுகளுக்கிடையிலான கல்வி மாநாடு இந்தாண்டு ஜூலை மாதம் மும்பையில் நடைபெற்றது போலவே, அடுத்த ஆண்டும் சிறப்பாக நடைபெற திட்டமிடப்படும்‘ என்றார்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு துறையில் ஒபாமாவின் வருகை எந்தளவிற்கு நன்மையைக் கொண்டுவரும் என்று மிகப்பெரிய ஆவலுடன் காத்திருந்த இந்திய இளம் தலைமுறையினருக்கு, ஒபாமாவின் வருகை பெரிய அளவில் திருப்தியை தரவில்லை என்றே கருதலாம். இந்தியாவிற்கு அமெரிக்காவின் மூலம் எந்தளவு நன்மை என்று நாம் திட்டமிடுகையில், அமெரிக்காவிற்கு, இந்தியாவின் மூலம் எந்தளவு நன்மை என்பதை ஒபாமாவும் திட்டமிட தவறவில்லை என்பதே உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *