சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி புதிய டிஜிபி குறித்து பரிசீலனை செய்த தமிழக அரசு தற்போது மீண்டும் லத்திகா சரணையே டிஜிபியாக நியமித்துள்ளது.
யுபிஎஸ்சி பரிந்துரைத்த குழுவிலிருந்து ஒரு டிஜிபி தேர்வு செய்யப்படுவது தமிழகத்தில் இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக லத்திகா சரண் டிஜிபியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தீயணைப்புத்துறை டிஜிபி ஆர்.நடராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், உச்சநீதிமன்ற வழிகாடுத்தல் நெறிப்படி லத்திகா சரண் நியமிக்கப்படவில்லை. லத்திகா சரணை விட சீனியரான தன்னைப் புறக்கணித்து விட்டு நியமனம் நடந்துள்ளதாக கூறியிருந்தார் நடராஜ்.
அவருக்கு ஆதரவாக டிஜிபியும், தற்போது சிஆர்பிஎப்பின் தலைவராக உள்ளவருமான விஜயக்குமாரும் அபிடவிட் தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், லத்திகா நியமனம் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தது. புதிய டிஜிபியை தேர்வு செய்ய வேண்டும். டிஜிபி பதவிக்கு தகுதி உடையவர்கள் பட்டியலை யுபிஎஸ்சிக்கு தமிழக அரசு அனுப்ப வேண்டும். அவர்கள் அதிலிருந்து 3 பேரை தேர்வு செய்து தமிழக அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும். பரிந்துரைக்கும் பட்டியலிலிருந்து புதிய டிஜிபியை தமிழக அரசு தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு காலக்கெடுவையும் அது விதித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல் செய்தது. ஆனால் தமிழக அரசு கோரிய இடைக்காலத் தடையை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
இதையடுத்து கோர்ட் உத்தரவுப்படி யுபிஎஸ்சிக்கு தகுதிப் பட்டியலை தமிழக அரசு அனுப்பியது. அதில் லத்திகா சரண் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து டிஜிபிக்களின் பெயர்களையும் இணைத்து அனுப்பியிருந்தது. அதைப் பரிசீலித்த யுபிஎஸ்சி லத்திகா சரண் உள்ளிட்ட 3 பேரை இறுதி செய்து தமிழக அரசுக்கு அனுப்பியிருந்தது.
அதிலிருந்து மீண்டும் லத்திகா சரணை டிஜிபியாக தேர்வு செய்து நியமித்துள்ளது தமிழக அரசு.
Leave a Reply