மதுரை: விமானங்களை இயக்க கற்றுக்கொள்ள ஏதுவாக, ஏரோ மாடலிங்கில் ஈடுபடுவோருக்காக, மதுரையில் பாரத் இன்டஸ்டிரீஸ் நிறுவனம் முதல் முறையாக மாதிரி விமானங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
விமானம் பறப்பதை பார்க்கும் எவருக்கும் தனி ஆனந்தமும், ஆர்வமும் ஏற்படும். இறைவன் தந்த அறிவுத்திறன் மூலம் பறவைகளை போல வானில் உலவ விமானங்களை மனிதன் கண்டுபிடித்தான். இத்துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்காக மாதிரி விமானங்களை (மாடல் ஏர்கிராப்ட்ஸ்) தயாரித்து விற்பனை செய்கிறது பாரத் இன்டஸ்டிரீஸ்.
மாதிரி கப்பல்கள், கார், கல்வி உபகரணங்கள், சூரிய ஆற்றல் கருவிகளையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது. நேற்று நடந்த துவக்க விழாவில், தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, டி.வி.எஸ்., ஸ்ரீ சக்ரா துணை தலைவர் நரேஷ், டி.வி.எஸ்., ஸ்ரீ சக்ரா மற்றும் லட்சுமி பள்ளிகளின் தலைவர் ஷோபனா ராமச்சந்திரன், பொதுப்பணித்துறை, மாநகராட்சி பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்டஸ்ட்டிரிஸ் இயக்குனர் பார்த்தசாரதி வரவேற்றார்.
மாதிரி விமானங்கள் ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் வானில் இயக்கப்பட்டன. பிரிபவர்டு கிளைடர்ஸ், எலக்ட்ரிக் ஏர்கிராப்ட்ஸ், எனர்ஜி இன்ஜின் ஏர்கிராப்ட்ஸ் போன்ற மாதிரி விமானங்கள் இயக்கப்பட்டன.
பார்த்தசாரதி நமது நிருபரிடம் கூறியதாவது: மாணவர்களிடம் அறிவியல் தொழில் நுட்ப திறனை வளர்த்து விஞ்ஞானிகளாக உருவாக்க, மாதிரி விமானங்களை தயாரிக்கிறோம். பள்ளி மற்றும் கல்லூரிகளில் கண்காட்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
பேப்பரில் செய்யப்படும் சிறிய விமானங்களை இயக்க முதலில் பயிற்சி அளிக்கப்படும். பின், ரிமோட் கண்ட்ரோல் மூலம் அதிக செயல் திறன் கொண்ட மாதிரி விமானங்களை இயக்க பயிற்சி அளிக்கப்படும். இதற்கு தேவையான உபகரணங்களில் மாதிரி விமானங்களை தயாரித்து விற்பதுடன், சர்வீசும் செய்கிறோம். காட்சிக்காக வைக்கப்படும் மாடல்கள், செயல்படும் மாடல்கள் என இரு வகைகள் உள்ளன. உண்மையான விமானத்தை போன்ற ஸ்கேல் மாடல்கள் உள்ளன. தரையில் இருந்து ரிமோட் கண்ட்ரோலை பயன்படுத்தி, விமானங்களை வானில் எந்த திசையில் இறக்கி, ஏற்றவும், வேகத்தை அதிகரிக்கவும் முடியும்.
மாதிரி விமானங்கள் கீழிறங்கும் போது மோட்டார்கள் அடிபடாமல் இருக்க வளையும் தன்மையுடன் பொருத்தப்படுகிறது. இறக்கைகள் பல்சா மரங்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இன்ஜின் பவர் மாதிரிகள் 25 ஆயிரம் ரூபாய் வரையும், எலக்ட்ரிக் பவர் மாதிரிகள் ஐயாயிரம் ரூபாய் முதல் விற்கப்படுகிறது. பொறியியல் மாணவர்கள் திட்ட அறிக்கை சமர்ப்பிக்க பயிற்சி பெறுகின்றனர். இத்துறையில் ஈடுபடுவோருக்கு அரசு சலுகைகள் வழங்க வேண்டும். இதுகுறித்து கூடுதல் விவரங்கள் பெற 98421 27114 ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.
Leave a Reply