புதுடில்லி : பார்லிமென்டின் கூட்டுக்குழு அமைக்க ஒப்புக்கொள்ளாத வரை, பார்லிமென்டை நடத்த விடமாட்டோம் என எதிர்க்கட்சிகளும், இறங்கி வருவதற்கு மத்திய அரசும் தங்கள் பிடிவாதத்தில் உறுதியாக இருப்பதால் நெருக்கடி முற்றுகிறது.
இரண்டாவது முறையாக நடந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து ஏழாவது நாளாக நேற்று பார்லிமென்ட் முடங்கியது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரிக்க பார்லிமென்டின் கூட்டுக்குழு அமைக்கப்படாத வரை விடப்போவதில்லை என எதிர்க்கட்சிகள், ஏழாவது நாளான நேற்று தொடர்ந்து இரு அவைகளிலும் கூச்சல் போட்டு அமளியில் ஈடுபட்டன. பதிலுக்கு ஐ.மு.கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்கள், நில மோசடியில் சிக்கியுள்ள எடியூரப்பா கதி என்னாச்சு என்று கூறி அமளியில் ஈடுபட்டனர்.இப்படியாக நேற்று மட்டும் லோக்சபாவும், ராஜ்யசபாவும் இரண்டு முறை கூடி, அமளியால் சபையை நடத்த முடியாத நிலையில் ஒத்தி வைக்கப்பட்டன. பொதுமக்களின் பணம் வீணாவதை பற்றி கவலைப்படாமல், 1.76 லட்சம் கோடி ரூபாய் என்னாச்சு என கூச்சல் போட்டு, முடக்கி வருகின்றனர்.
.மீண்டும் தோல்வி: பார்லிமென்டை சுமூகமாக நடத்த, நேற்று அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன், கடந்த வாரத்தில் இதே முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நேற்று காலையில் பார்லிமென்டின் இரு அவைகளுமே முடங்கிய பிறகு மதியம், பார்லிமென்ட் அலுவலகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.இதில், அரசு தரப்பில் பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், நாராயணசாமி, பன்சால் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சிகள் சார்பில் சுஷ்மா சுவராஜ், டி.ஆர்.பாலு, தம்பிதுரை, மைத்ரேயன், யெச்சூரி, குருதாஸ் தாஸ் குப்தா, சரத் யாதவ், பிரபுல் படேல், மனோகர் ஜோஷி, அஜித் சிங், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசியவர்கள் தெரிவித்த கருத்து வருமாறு:பிரணாப் முகர்ஜி: “பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க வேண்டுமென ஏன் பிடிவாதம் காட்டுகிறீர்கள். பொதுக்கணக்கு குழு விசாரித்தால் போதுமானது. இந்த குழுவுக்கு சி.பி.ஐ., வருமான வரி உள்ளிட்ட பல விசாரணை அமைப்புகளும் உதவும் வகையில் ஏற்பாடுகளை அரசே செய்து கொடுக்க முடியும்; விசாரிக்க வேண்டியவர்களுக்கு சம்மனும் கூட அனுப்ப முடியும். எனவே, பொதுக்கணக்கு குழு விசாரணைக்கு அரசு தயாராக உள்ளதை எதிர்க்கட்சிகள் ஏற்க வேண்டும்’ என்றார்.
பிரணாப் பேசி முடித்தவுடன், அனைத்து கட்சித் தலைவர்களுமே கடும் மறுப்பை தெரிவித்தனர். “பொதுக்கணக்கு குழு விசாரித்தால், அமைச்சர்களை சம்மன் செய்ய முடியாது; கூட்டுக்குழுவால் மட்டுமே சம்மன் அனுப்ப முடியும். எனவே, கூட்டுக்குழுவுக்கு ஒப்புக் கொள்ளாதவரை பார்லிமென்டை நடக்க விட மாட்டோம்’ என்றனர்.
சுஷ்மா சுவராஜ்: ஜெ.பி.சி., அமைப்பது தான் தீர்வாகும். ஜே.பி.சி., முன் அமைச்சர்களையும், பிரதமரையும், முன்னாள் அமைச்சர்களையும் சம்மன் செய்ய முடியும். பொதுக்கணக்கு குழுவிற்கு சம்மன் செய்யும் அதிகாரம் இல்லை.
டி.ஆர்.பாலு: பார்லிமென்ட் கூட்டுக்குழுவை அமைத்தால் அது, 1998ம் ஆண்டிலிருந்து விசாரணை நடத்த வேண்டும்.
அஜித் சிங்: “பார்லிமென்டின் கூட்டுக்குழு வேண்டுமென தி.மு.க., திரிணமுல் ஆகிய கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் கூறுகின்றன. ஆனால், அது வேண்டாம் என்று காங்கிரஸ் கூறுகிறது. ஏன் வேண்டாம் என்பது குறித்து காரணங்களை தெரிவிக்க மறுக்கிறது.
தம்பிதுரை: “1994ம் ஆண்டில் தான் தொலைத்தொடர்பு கொள்கை வகுக்கப்பட்டு லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, அப்போதிருந்தே விசாரணை நடத்த வேண்டும்.
குருதாஸ் தாஸ் குப்தா: “பிரதமர் தரப்பிலிருந்து ராஜாவுக்கு அறிவுரை கூறி கடிதம் எழுதப்பட்டதாகவும், அவர் அதை புறக்கணித்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. அப்படியானால், ராஜா மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டது ஏன்?
அரசு முடிவு: அனைவரது கருத்துக்களையும் கேட்டறிந்து விட்டு இறுதியாக பேசிய பிரணாப் முகர்ஜி, “இங்கு கூறிய கருத்துக்களை எல்லாம் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவிக்கப்படும். பின்னர் உரிய முறையில் பரிசீலனை செய்து, அரசு தரப்பு தனது முடிவை அறிவிக்கும்’ என்றார்.
பேச்சு வார்த்தை தோல்வியடைந்து இருப்பதால், ஸ்பெக்ட்ரம் பிரச்னை தீவிரமாகியுள்ளது. இதன் காரணமாக, இன்றும் பார்லிமென்டை நடத்த விடாமல் செய்வதில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக உள்ளன. பொதுவாக பார்லிமென்டை திட்டமிட்டபடி நடத்தும் செயலில் ஆளும் அரசும் தீவிரமாக இல்லை என்ற கருத்து தற்போது எழுந்திருக்கிறது.
அதனால், பார்லிமென்டை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து, பிரச்னையை சமாளிக்க அரசு திட்டமிட்டதாகவும் பேச்சு எழுந்துள்ளது.
Leave a Reply