புதுடில்லி : சுயநிதி மருத்துவ கல்லூரிகளில், ஏழை மற்றும் தகுதியுடைய மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்குவதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 75 சதவீத மாணவர் சேர்க்கை அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. மீதுமுள்ள 25 சதவீதத்தில், 15 சதவீதம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காகவும், 10 சதவீதம் கல்லூரி நிர்வாகங்களே நிரப்பிக் கொள்ளவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கல்லூரிகளுக்கான நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை கட்டணங்களை நிர்ணயிக்க, ஒழுங்குமுறை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குஜராத்தில் சேவை நோக்கத்துடன் செயல்பட்டு வரும் சுயநிதி மருத்துவ கல்லூரி ஒன்று, நிர்வாக ஒதுக்கீட்டில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் வகையில், சேர்க்கை மற்றும் கட்டண நிர்ணய விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என, குஜராத் ஐகோர்ட்டில் மனு செய்தது.
ஆனால், இந்த மனுவை குஜராத் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அந்த கல்லூரி, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ரவீந்திரன் மற்றும் கோகலே அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தி நேற்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது: அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்லூரிகளை தவிர்த்து மற்ற சுயநிதி தொழிற்கல்லூரிகளில், நிர்வாக சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் இனி கட்டணமில்லாமல் ஏழை மாணவர்களை சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
இதுபோன்ற சிறப்பு ஒதுக்கீடுகளுக்கு, அரசு கட்டண ஒழுங்குமுறை கமிட்டியிடம் அனுமதி பெற அவசியமில்லை. இதற்காக அரசு விதித்துள்ள இரண்டு விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன. மேலும், ஏழை மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடுகளில் முறைகேடுகள் நடக்காமல் அரசு கண்காணிக்க வேண்டும். அதை சாக்காக வைத்து வேறு வகையில் அதிக கட்டணம் வசூலிக்க வழிவகை காணக்கூடாது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply