இஸ்லாமாபாத் : “ஐ.நா., சபையின் பாதுகாப்பு சபையில், இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை’ என்று பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் பொருமியுள்ளனர்.
இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, பார்லிமென்டில் உரையாற்றும் போது, “ஐ.நா., சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க, அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும்’ என்று குறிப்பிட்டார். ஒபாமாவின் பேச்சை பாகிஸ்தானால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அன்று சில மணி நேரத்திலேயே பாகிஸ்தான் வெளியுறவுத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. “ஒபாமாவின் கருத்து ஏற்புடையதல்ல. அமெரிக்கா போன்ற நாடுகள் இது போன்ற பிரச்னைகளில் தொலைநோக்குடன் முடிவு எடுக்க வேண்டும். இந்தியா, அண்டை நாடுகளுடன் பல பிரச்னைகளை கொண்டுள்ளது. ஐ.நா., சபையின் தீர்மானத்தை மதிக்க இந்தியா தவறிவிட்டது. எனவே, அமெரிக்கா ஒத்துழைக்கக் கூடாது’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாகிஸ்தானில் ஆளும் கூட்டணி அரசில், பாதுகாப்பு அமைச்சராக உள்ள சவுத்ரி அகமது முக்தர் கூறுகையில், “ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவது அவ்வளவு எளிதானதல்ல. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் பிரச்னை முக்கிய பிரச்னையாக உள்ளது. இது தீர்க்கப்படாமல் உள்ளது’ என்றார்.
கல்வி அமைச்சர் சர்தார் ஆசிப் அகமது கூறுகையில், “பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு சர்வதேச நிலைமைகள் சாதகமாக இல்லை. ஒபாமா நிர்வாகம் ஆதரித்தால் மட்டும் இது சுலபமாக கிடைத்து விடாது; சர்வதேச நாடுகள் ஒத்துழைக்க வேண்டும். பல நாடுகள் நிரந்தர உறுப்பினராவதற்கு போட்டி போடும் போது, இந்தியாவுக்கு கிடைத்து விடுமா என்ன’ என்றார். பாகிஸ்தான் எல்லையில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை ஒழிக்க வேண்டும். உலகின் எந்த பகுதியில் பயங்கரவாதிகளுக்கு இடம் அளிப்பதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என ஒபாமா குறிப்பிட்டு இருந்தார். இது பற்றி வாய் திறக்காத பாகிஸ்தான் அமைச்சர்கள், இந்தியாவுக்கு ஆதரவாக பேசியதை மட்டுமே தாங்கிக் கொள்ள முடியாமல் ஆவேசமாக பேசியுள்ளனர்.
Leave a Reply