4-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதம் நடைபெறுகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் ஜனவரி மாதம் நடக்கிறது. இந்த ஏலத்தில் இந்திய வீரர்கள் 62 பேர் இடம் பெற்றுள்ளனர்.
வீரர்களுக்கான அடிப்படை விலை மதிப்பை கிரிக்கெட் வாரியம் நிர்ணயித்துள்ளது. மொத்தம் 5 நிலைகளில் வீரர்களுக்கான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் நிலை ரூ.1.84 கோடியாகும். இதில் டோனி, தெண்டுல்கர், ஷேவாக், யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங் ஆகிய 5 வீரர்களே இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கான குறைந்த பட்ச ஏல விலை ரூ.1.84 கோடியாகும். 2-வது நிலையான ரூ.1.3 கோடியில் ரெய்னா, யூசுப்பதான், ஜாகீர்கான் இடம் பெற்றுள்ளனர்.
3-வது நிலையான ரூ.92 லட்சத்தில் காம்பீர், வீரட் கோக்லி, இர்பான் பதான், உத்தப்பா, இஷாந்த் சர்மா, நெக்ரா, பிரவீண்குமார் மற்றும் டிராவிட், லட்சுமண் இடம் பெற்றுள்ளனர்.
அதற்கு அடுத்த நிலையில் ரூ.46 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மனோஜ் திவாரி, சகா, அசோக் திண்டா, புஜரா உள்பட ரஞ்சி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். கடைசி நிலையான ரூ.23 லட்சத்தில் மன்பிரீத் கோனி, தியாகி, ஸ்ரீராம் உள்பட புதுமுக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
20 ஓவர் போட்டியில் இடம் பெறாமல் ஐ.பி.எல். போட்டியில் மட்டும் ஆடும் டிராவிட், லட்சுமணுக்கு ரூ.92 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை சில அணிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
டெஸ்ட் அணியின் தூண்களான அவர்களது குறைந்த பட்ச விலையை ரூ.46 லட்சமாக நிர்ணயிக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. ரூ.92 லட்சத்துக்கு அவர்களை வாங்க அணிகள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான கங்குலி, டிராவிட் விடுவிக்க அந்த அணிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐ.பி.எல். போட்டி அறிமுகம் ஆனபோது இருவரும் நட்சத்திர வீரர்களாக கொல்கத்தா, பெங்களூர் அணிக்கு தேர்வு பெற்றனர். 3 ஆண்டு ஒப்பந்தம் முடிந்த நிலையில் இந்த இருவரையும் அணியில் இருந்து விடுவிக்க அந்த அணி நிர்வாக முடிவு செய்துள்ளது.
கொல்கத்தா நைட்ரை டர்ஸ் தங்களது அணியை முற்றிலும் மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி கங்குலியை நீக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதே போல பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் டிராவிட்டை கழற்றி விட முடிவு செய்துள்ளது. சென்னை சூப்பர்கிங்ஸ் டோனி, ரெய்னா, முரளி விஜய், அல்லிமார்கல் ஆகியோரை தக்க வைத்துக் கொள்ளும் என்று தெரிகிறது.
இதே போல தெண்டுல்கர் மும்பை அணியிலும், ஷேவாக் டெல்லி அணியிலும் நீட்டிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
Leave a Reply