கர்நாடக அரசியலில் புதிய புயல் அரசு நிலங்களை முறைகேடாக மகன்களுக்கு கொடுத்த எடியூரப்பா பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

posted in: அரசியல் | 0

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா ஆட்சி பொறுப்பை ஏற்ற நாள் முதல் சோதனை மேல் சோதனைகள் சந்தித்து வருகிறார்.

சொந்த பா.ஜ.க. கட்சி எம்.எல்.ஏ.க்களே வில்லன்களாக மாறி அவருக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்கள். ஆட்சியை பறிகொடுப்பதில் இருந்து நூலிழையில் அவர் தப்பினாலும் நித்ய கண்டம் பூரண ஆயுசு என்ற ரீதியில் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் எடியூரப்பா மீது புதிதாக மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியாகி உள்ளன. இந்த மூன்று ஊழல் குற்றச்சாட்டுக்கும் முதல்-மந்திரி எடியூரப்பா எளிதில் தப்ப முடியாத அளவுக்கு நேரடியாக உள்ளன.

பெங்களூரில் புளுட்பவர் டெக்னாலாஜிஸ் என்றொரு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா இருவரும் இயக்குனர்களாக உள்ளனர். இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட 15 நாட்களுக்குள் பெங்களூரில் பிரதான இடத்தில் அரசுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா தொழில் மேம்பாட்டுக்கழகத்துக்கு சொந்தமான அந்த நிலம் ஜிகானி முதல் பேஸ் பகுதியில் உள்ளது. விதிகளை மீறி எடியூரப்பா தலையீட்டின் பேரில் 2 ஏக்கர் நிலம் அடிமாட்டு விலைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

எடியூரப்பா மீது சுமத்தப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டு வருமாறு:-

எடியூரப்பா துணை முதல்-மந்திரியாக இருந்த போது பெங்களூர் மேம் பாட்டுக்கழகத்துக்கு சொந்தமான நிலத்தை அபகரித்ததாக கூறி செல்வகுமார் என்பவர் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி கோர்ட்டில் வழக்கு நடந்தது. 2006-ல் செல்வகுமார் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

எடியூரப்பா முதல்வர் ஆனதைத் தொடர்ந்து அவருக்கு செல்வகுமார் ஒரு கடிதம் எழுதினார். சர்ச்சைக்குரிய நிலத்தை தனக்கு ஒதுக்கீடு செய்து தருமாறு அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதை ஏற்று செல்வகுமாருக்கே அந்த நிலத்தை கொடுக்க எடியூரப்பா உத்தரவிட்டார். துணை முதல்வராக இருந்த போதுயாரிடம் இருந்து நிலத்தை பறித்தாரோ? அவருக்கு முதல்வரானதும் நிலத்தை திருப்பி கொடுத்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இதிலும் நிறைய விதிமீறில்கள் உள்ளதாக காங்கிரசார் புகார்கள் தெரிவித்துள்ளனர்.

எடியூரப்பா மீது கூறப்படும் மூன்றாவது குற்றச்சாட்டு, வீதிகளை மீறி தன் மகன் ராகவேந்திராவுக்கும் வீடு கட்ட அரசு நிலத்தை ஒதுக்கி கொடுத்ததாகும். ராகவேந்திரா ஷிமோகா பாராளுமன்ற தொகுதி எம்.பி. ஆக உள்ளார்.

அவருக்கு ஏற்கனவே ரச்சனஹல்லி, மன்யதா ரெசிடென்சி பகுதிகளில் வீடு உள்ளது. ஏற்கனவே நிலம் வைத்திருப்பவர்களுக்கு நாகசெட்டி ஹல்லி பகுதியில் உள்ள இடங்களை கொடுக்கக்கூடாது என்று அரசு விதிகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. எடியூரப்பாவுக்கும் இது நன்கு தெரியும்.

தெரிந்திருந்தும் எடியூரப்பா தன் மகனுக்காக விதிகளை மீறி நாகசெட்டி ஹல்லியில் 50ஜ்80 சதுர அடி நிலத்தை ஒதுக்கிக் கொடுத்தார். பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் போது இந்த வீடு வாங்கிய தகவலை ராகவேந்திரா மனுவில் குறிப்பிடவில்லை என்று தெரியவந்துள்ளது.

ராகவேந்திரா முறை கேடாக பெற்ற நாகரெட்டி ஹல்லி இடம் விவசாய இடமாக இருந்தது. அதை அவர் தற்போது குடியிருப்புப் பகுதியாக மாற்றியுள்ளார்.

எடியூரப்பா தன் மகன்களுக்காக முறைகேடாக அரசு நிலங்களை இப்படி ஒதுக்கீடு செய்திருப்பது காங்கிரஸ் தலைவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. எடியூரப்பா பதவி விலக கோரி அவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

தேசிய அரசியலில் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க தலைவர்கள் படாத பாடுபடுத்தி வரும் நிலையில் கர்நாடகாவில் பா.ஜ.க.வை காங்கிரஸ் தலைவர்கள் துவம்சம் செய்யத்தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *