கலிபோர்னியா: இணையதள உலகின் ஜாம்பவானான கூகுளுக்கும் சமூக இணையதளமான பேஸ்புக்குக்கும் புதிய யுத்தம் தொடங்கியுள்ளது.
இதுவரை பேஸ்புக் பயனாளர்கள், கூகுளின் ஜி-மெயிலில் உள்ள தொடர்பாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளை அப்படியே தரவிறக்கம் செய்ய வசதி இருந்தது. இதனை தற்போது தடை செய்துள்ளது கூகுள்.
இதனால், இனி ஜி-மெயில் கணக்கில் உள்ள தங்களின் நண்பர்கள், தெரிந்தவர்கள் மின்னஞ்சல் முகவரிகளை இனி பேஸ்புக்கில் இறக்க முடியாது.
“ஒரு முறை தங்கள் தொடர்பு முகவரிகளை பேஸ்புக் போன்ற சமூகத் தளங்களில் இறக்கிக் கொள்ளும் பயனாளர்கள், மீண்டும் அதுபோல செய்ய தடை செய்யப்பட்டுள்ளது”, என கூகுள் இன்று தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
எதனால் இந்தத் தடை?
அமெரிக்காவில் கூகுளை விட அதிகம் பார்க்கப்படும் இணையதளமாக பேஸ்புக் மாறியுள்ளது. மேலும் இணையதளப் பயனாளர்கள் மிக அதிக நேரம் செலவிடும் தளமாகவும் பேஸ்புக் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுவரை விளம்பர வருவாயில் பெரிய அளவு அக்கறை காட்டாதது போல காட்டிக் கொண்ட பேஸ்புக்கும் இப்போது கிடைத்துள்ள மவுசை வைத்து பல மில்லியன் டாலர் வருவாய் ஈட்டி வருகிறது.
Read: In English
இவையெல்லாம் கூகுளுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கூகுளின் விளம்பர வருவாய் பாதிக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
பல்வேறு இலவச சேவைகள், பயன்பாட்டு மென்பொருள்களை உருவாக்கி தரும் தமது சேவைகளை வைத்து பேஸ்புக் போன்ற தளங்கள் பெரும் பணம் சம்பாதிப்பதை அனுமதிக்கக் கூடாது என்ற அடிப்படையிலேயே கூகுள் இந்தத் தடையை விதித்துள்ளது.
Leave a Reply