திருவனந்தபுரம் : கோர்ட் பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்தாமல் அலட்சியமாக இருந்து வந்த போலீஸ் உதவி கமிஷனர் உட்பட மூன்று அதிகாரிகளுக்கு, ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், மாநில போலீஸ் சிறப்புப் பிரிவில் உதவி கமிஷனராக பணியாற்றி வருபவர் கோபகுமார். இவர் இதற்கு முன், கன்டோன்மென்ட் போலீஸ் சரக உதவி கமிஷனராக பணியாற்றி வந்தார். இவர், 2006 மற்றும் 2007ம் ஆண்டு திருவனந்தபுரம் கோட்டை போலீஸ் நிலையத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார்.
அப்போது, 2006ம் ஆண்டு கல்லாட்டு முக்கு பகுதியில் ஒரு வீட்டிலிருந்து 11 சவரன் மற்றும் 65 ஆயிரம் ரூபாய் கொள்ளை போன வழக்கு குறித்து விசாரித்து வந்தார். அதேபோல், 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி, கமலேஸ்வரம் ஜூப்ளி நகரில் ஒரு வீட்டில் 56 கிராம் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை போனது. இவ்விரு வழக்குகளையும் அவர் தான் விசாரித்தார். இவ்விரு வழக்குகளிலும் கோர்ட்டில் அவர் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவில்லை. இதுகுறித்து பலமுறை அவருக்கு சம்மன் அனுப்பியும் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, மாவட்ட நீதித்துறை நடுவர் மன்ற மாஜிஸ்திரேட் அஷ்ரப், அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
இவரை தவிர, 2007ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி, கொஞ்ஞிரவிளை பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடு போன வழக்கை, வலியத்தரா போலீஸ் நிலைய முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வி.நாயர் என்பவர் விசாரித்தார். அவரும் இவ்வழக்கில் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்காமல் இருந்து வந்தார். எனவே, அவருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பூஜப்புறா போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஷெரீக் என்பவர், போலீசார் மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் முக்கிய குற்றவாளிகளுக்கு கோர்ட் அனுப்பிய சம்மன்களை வழங்காமல், அவற்றை திருப்பி அனுப்பினார். எனவே, அவருக்கு சார்பு நீதிமன்ற நீதிபதி ஜாமீனில்லா வாரன்ட் பிறப்பித்தார்.
Leave a Reply