சியோல்:”அமெரிக்கா – சீனா இடையே பொருளாதார விஷயங்கள் தொடர்பான பேச்சு வார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; எவ்வித முரண்பாடும் இல்லை’ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார்.
தென்கொரிய தலைநகர் சியோலில் நடக்கும், “ஜி-20′ மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன அதிபர் ஹூ ஜிண்டாவோவை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.அமெரிக்காவுக்கு சீனப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும், வேலைவாய்ப்பை பெறவும் சீனா பகீரத பிரயத்தனம் செய்கிறது. இதற்காக அமெரிக்க டாலரை விட சீனாவின் யுவான் மதிப்பு குறைந்து இருப்பது போல் செயற்கைத்தனமாகக் காட்டி, அமெரிக்காவிடம் ஏற்றுமதி ஆர்டர்களைப் பெறப் பார்க்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்ற பிறகு, சீன அதிபருடன் ஆறு முறை பேசியுள்ளார்.
இந்நிலையில், நேற்று ஏழாவது முறையாக சந்தித்துப் பேசியுள்ளார். உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவை சரி செய்யவும், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பற்றாக்குறையை சரி செய்வதற்கும், “ஜி-20′ மாநாட்டில் பங்கேற்கும் பிற நாட்டுத் தலைவர்களுடன் சந்தித்துப் பேச ஒபாமா திட்டமிட்டிருந்தார். இருப்பினும், சீன அதிபருடன் சந்தித்துப் பேச அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஹூ ஜிண்டாவோவை சந்திப்பதற்கு முன், சீனாவுடனான உறவு பற்றி ஒபாமா கூறியதாவது:அமெரிக்க – சீன உறவு கடந்த சில ஆண்டுகளாக வலுவாக உள்ளது. பொருளாதார விஷயங்கள் தொடர்பான எங்கள் பேச்சு வார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் இருதரப்பு உறவு மட்டுமல்லாது, உலக விஷயங்கள் குறித்தும் பேசினோம்.இவ்வாறு ஒபாமா கூறினார்.
சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ கூறுகையில், “அமெரிக்காவுடனான உறவு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து விஷயங்களிலும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவதற்கும், உறவை மேம்படுத்தவும் தயாராக இருக்கிறோம்’ என்றார்.சீனாவுடனான பேச்சு வார்த்தை முன்னேற்றப் பாதையில் செல்கிறது என்று குறிப்பிட்ட ஒபாமா, பீஜிங் கரன்சி விஷயத்தில் நடந்து கொள்வது குறித்து பேசப்பட்டதா என்பது பற்றி எதையும் குறிப்பிடவில்லை.
Leave a Reply