புதுடில்லி : மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு, நேற்று மீண்டும் ஒரு இக்கட்டான நிலைமை உருவானது.
கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பி.ஜே.தாமசை, மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையராக நியமித்தது எப்படி என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய அரசில் தொலைத்தொடர்பு துறை செயலராக பதவி வகித்த பி.ஜே.தாமஸ், மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து பொதுநல அமைப்பு ஒன்றும், முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் லிங்டோவும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையர் பதவி என்பது, நாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையில் மிகப்பெரிய பதவி. எந்த விதமான சந்தேகத்திற்கும் இடமில்லாத நேர்மையான நபரையே இந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டும். தொலைத்தொடர்பு துறை செயலராக பதவி வகித்த காலத்தில், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை தடுக்க, தாமஸ் எதுவும் செய்யவில்லை. மேலும், கேரள மாநில தலைமைச் செயலராக தாமஸ் பதவி வகித்த காலத்தில் தான், பாமாயில் எண்ணெய் இறக்குமதி ஊழல் நடந்தது. இந்த வழக்கில் தாமசுக்கு எதிராக, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை எப்படி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்க முடியும். அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கபாடியா, நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், சுவாதந்தர் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டது தொடர்பான பைலை, நீதிபதிகள் முன், அட்டர்னி ஜெனரல் வாகன்வதி சமர்ப்பித்தார்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை எப்படி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையராக நியமிக்க முடியும்.பாமாலின் இறக்குமதி ஊழல் வழக்கில், தாமசுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் போது, அவர் எப்படி லஞ்ச ஒழிப்பு ஆணையராக திறமையாக செயல்பட முடியும். தாமஸ் நியமனத்தில், தகுதி அளவுகள் சரியாக கடைபிடிக்கப்பட்டுள்ளனவா?
பணி விதிமுறைகளின்படி, ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அது நிலுவையில் இருந்தால், அவரை பதவி உயர்வுக்குக் கூட பரிசீலிக்கக் கூடாது. ஆனால், இங்கே லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையராக தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தாமஸ் லஞ்ச ஒழிப்பு ஆணையராக செயல்பட்டால், ஒவ்வொரு கட்டத்திலும் தர்ம சங்கடமான நிலைமையை எதிர்கொள்ள நேரிடும். அவரின் செயல்பாட்டை பலரும் கேள்வி கேட்கலாம்.பாமாலின் எண்ணெய் இறக்குமதி ஊழல் வழக்கை, லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் கேரள பிரிவு விசாரிக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், தாமசை மத்திய ஆணையத்தின் தலைவராக நியமித்தது எப்படி சரியாக இருக்கும்.இந்த பிரச்னை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே. நாங்கள் (நீதிபதிகள்) அனைவரும் ஒன்றாக அமர்ந்து, தாமஸ் நியமனம் தொடர்பான பைல்களை பார்ப்போம். அதன் பின்னரே உத்தரவு பிறப்பிப்போம். அதுவரை வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைக்கிறோம். தாமசுக்கு எதிராக மனுதாரர்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு, மத்திய அரசு இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இதற்கு பதில் அளித்த அட்டர்னி ஜெனரல் வாகன்வதி, “தாமஸ் நியமனத்தில் விதிமுறைகள் அனைத்தும் முறையாக கடைபிடிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை எல்லாம் பரிசீலனையில் எடுத்து கொண்டால், நீதித்துறையில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நியமனங்கள் குறித்தும், அரசியல் சட்ட ரீதியான நியமனங்கள் குறித்தும் பரிசீலிக்க வேண்டியது நேரிடும்.இந்த வழக்கில் மனு தாக்கல் செய்துள்ளவர்களில் ஒருவரான ஜே.எம்.லிங்டோதான், தாமஸ் தொடர்பான நன்னடத்தை அறிக்கையை முன்னர் தயாரித்துள்ளார். அதில், தாமசின் நேர்மை, சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்று கூறியுள்ளார். இருந்தும் இப்போது மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் பொதுநல அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் எல்லாம் சரியானவை அல்ல’ என்றார்.
ஏற்கனவே “2ஜி’ ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் தாமத நடவடிக்கை என்று சுப்ரீம் கோர்ட் கூறி அவரிடம் இருந்து பிரமாண வாக்குமூலம் பெற்ற விஷயம் ஓய்ந்த நிலையில், அரசுக்கு அடுத்த நெருக்கடியாக இந்த விஷயம் எழுந்திருக்கிறது.
“நாங்கள் சொன்னது சரியாகி விட்டது’ : “மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையராக, தாமசை நியமிக்க நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அது சரியே என, தற்போது சுப்ரீம் கோர்ட்டும் தெரிவித்துள்ளது’ என, பாரதிய ஜனதா கூறியுள்ளது.இது தொடர்பாக பா.ஜ., தகவல் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் மேலும் கூறுகையில், “எந்த விதமான குற்றப்பின்னணியும், குற்றச்சாட்டும் இல்லாதவரையே, லஞ்ச ஒழிப்பு ஆணையராக நியமிக்க வேண்டும் என, பாரதிய ஜனதா கூறியது.அதனால், தாமசின் நியமனத்திற்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். தாமஸ் நியமனம் பற்றி, சுப்ரீம் கோர்ட் தற்போது கடுமையான கருத்தை தெரிவித்திருப்பதன் மூலம், பாரதிய ஜனதா சொன்னது உண்மையாகியுள்ளது’ என்றார்.
Leave a Reply