தே.மு.தி.க., சாயப்போவது எந்த பக்கம்?

posted in: அரசியல் | 0

தமிழக அரசியலில், தொழில் நகரமான திருப்பூருக்கு எப்போதும் கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களும் அதிகளவில் வசிக்கும் பகுதியாக திருப்பூர் உள்ளதால், தேர்தல் நேரங்களில் திருப்பூரின் வெற்றியை தட்டிப் பறிப்பதில், அரசியல் கட்சிகளுக்குள் ஒரு யுத்தமே நடப்பது வாடிக்கை.

கோவை மாவட்டத்துடன் திருப்பூர் இணைந்திருந்த போதும், இப்போது தனி மாவட்டமாக இருக்கும்போதும், அ.தி.மு.க., கோட்டையாகவே திருப்பூர் கணிக்கப்படுகிறது. நடந்து முடிந்த தேர்தல்களும், அதையே வெளிப்படுத்தி வந்திருக்கின்றன. திருப்பூரை எப்படியும் தி.மு.க., வசம் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற திட்டத்தில், தி.மு.க., தலைமை பல காய்களை நகர்த்தியுள்ளது. திருப்பூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, கோவை, ஈரோடு மாவட்ட பகுதிகளை பிரித்து, மாவட்ட அந்தஸ்து வழங்கப்பட்டது. வெள்ளக்கோவிலில் ஒதுங்கியிருந்த, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதனை, மாவட்ட செயலராக உருவாக்கினர். 42 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூ.,வில் இருந்து, திருப்பூரில் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவரான கோவிந்தசாமி எம்.எல்.ஏ.,வை தி.மு.க., ஆதரவாளராக உருவாக்கியுள்ளனர். அவருக்காக, எல்.பி.எப்., புதிய தொழிற்சங்கத்தை உருவாக்கி, அச்சங்கத்துக்கு மாவட்ட தலைவராக பொறுப்பு தந்து, தொழிலாளர்களை தி.மு.க., வசம் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருப்பூரில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து வந்து செல்லும் துணை முதல்வர் ஸ்டாலினும், திருப்பூரை எப்படியும் தி.மு.க., கோட்டையாக மாற்றி காட்டுங்கள் என அமைச்சர் சாமிநாதன், மேயர் செல்வராஜ் உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், பஞ்சு, நூல் விலை உயர்வை கண்டித்து, விஜயகாந்த் தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. முதலில், கண்டன ஆர்ப்பாட்டமாக திருப்பூர் எம்.ஜி.ஆர்., சிலை அருகில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது; மேடையில் விஜயகாந்த் பேசுவது என திட்டமிடப்பட்டதால், கண்டன பொதுக்கூட்டமாக மாறியது. திருப்பூர் யூனியன் மில் ரோட்டில், நான்கு ரோடுகள் சந்திப்பில் நடந்த அக்கூட்டத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி, பிற மாவட்டங்களை சேர்ந்த தே.மு.தி.க.,வினரும் இக்கூட்டத்தில் திரளாக வந்து பங்கேற்றனர் என்றாலும், திரண்டிருந்த கூட்டம் மிக அதிகம். குறிப்பாக, பெண்கள் ஏராளமானோர் கூட்டத்துக்கு வந்திருந்தனர்.

அ.தி.மு.க., – தி.மு.க., – காங்., – ம.தி.மு.க., – கம்யூ., கட்சிகளுக்கு மத்தியில் தே.மு.தி.க., வளர்ந்து வரும் கட்சியாக கருதப்பட்டாலும், அக்கட்சிகளுக்கு வரும் கூட்டத்தை விட பல மடங்கு கூட்டம் காணப்பட்டது. திரண்ட கூட்டமா, திரட்டப்பட்ட கூட்டமா என்ற விவாதம் ஒருபுறம் இருந்தாலும், விஜயகாந்த் பேசி முடிந்த பின்பே, அக்கூட்டம் கலைந்தது. ஆர்ப்பாட்டமாக அறிவித்த கூட்டத்தை, விஜயகாந்த் பொதுக்கூட்டமாக மாற்றியதன் பின்னணி, திருப்பூரில் தே.மு.தி.க.,வின் பலத்தை காட்டும் முயற்சியாக இருக்கலாம்; வரும் தேர்தலில், தே.மு.தி.க.,வின் பக்கபலத்தை மாற்றுக் கட்சிகளுக்கு உணர்த்தவே, இப்படியொரு பிரமாண்ட கண்டன கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தாரா விஜயகாந்த் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விஜயகாந்த் பேசும் போது, அ.தி.மு.க., பற்றிய எவ்வித விமர்சனங்களையும் கையில் எடுக்கவில்லை. பஞ்சு, நூல் விலை உயர்வை பற்றிய கண்டன கூட்டமாக இருந்தபோதும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் கண்டிக்கவில்லை. மாறாக, முதல்வர் கருணாநிதியை மட்டுமே குறி வைத்து தாக்கினார். ஸ்டாலின் குறித்தும் பல கருத்துகளை தெரிவித்தார். மற்ற கட்சிகள் தன்னுடன் கூட்டணி வைத்து கொள்வதை, “இலை’ போட்டு பிரியாணி விருந்து வைக்க மற்ற கட்சிகள் அழைப்பதாக கூறிய விஜயகாந்த், எந்த கட்சியுடன் கூட்டணி என்பதையும் தெளிவாக்கவில்லை. ஆனால், தி.மு.க., அரசை மட்டுமே சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்தார். மாநாடு நடத்த திட்டமிட்டிருக்கிறேன்; குடும்பத்துடன் வாருங்கள் என, அழைப்பும் விடுத்தார்.

கடந்த 2006ல் நடந்த சட்டசபை தேர்தலில், தற்போதைய தே.மு.தி.க., மாநகர செயலர் பழனிசாமி, திருப்பூரில் போட்டியிட்டு 27 ஆயிரம் (8.5 சதவீத) ஓட்டுகளை பெற்றார். கடந்தாண்டில் நடந்த லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வின் தற்போதைய மாவட்ட செயலர் தினேஷ்குமார், 24 ஆயிரம் (15.9 சதவீதம்) ஓட்டுகளை, திருப்பூர், அவினாசி பகுதிகளை கொண்ட வடக்கு தொகுதியில் பெற்றுள்ளார். இப்போது, திருப்பூர் இரு தொகுதிகளாக பிரிக்கப்படும் நிலையில், எத்தனை சதவீத ஓட்டுகளை தே.மு.தி.க., வசப்படுத்தும் என்பது, அக்கட்சியுடன் கூட்டணி சேருபவர்களுக்கு பலமாக மாறும் வாய்ப்பு அதிகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *