சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், புற்றுநோய் போன்றவை உலகளவில் பரவலாக காணப்பட்டாலும், இந்திய சமூகத்தில் அதிகளவில் இருக்கிறது.
எனவே இதற்கான சிறப்பு மருத்துவ கவனிப்புகள் தேவைப்படுகின்றன. இதற்கான முக்கியத்துவம் முன்பே உணரப்பட்டதால், 1930௦ம் ஆண்டுகளிலேயே நியூட்ரிஷன் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் 1960௦ம் ஆண்டுகளில்தான் இந்தவகை படிப்புகள் முக்கியத்துவம் பெற்றன. இன்றைய நிலையில் புதிய வகையிலான பயிற்சிகளுடன் நியூட்ரிஷன் படிப்புகள் புதிய பாய்ச்சல்களை தொடங்கியுள்ளன.
நியூட்ரிஷன்கள்/டயடீஷியன்களின் பணிகள்:
* உணவின் ஊட்டச்சத்து தரத்தை ஆராய்தல்
* அனைத்து உணவு உள்ளடக்கங்களையும் புரிந்துகொள்ளுதல்
* உணவு பழக்கவழக்கங்கள் சம்பந்தமாக மக்களுக்கு ஆலோசனை வழங்குதல்
* ஆரோக்கியத்தை அதிகரிக்கும் டயட் முறைகளை திட்டமிடுதல்
நியூட்ரிஷன் மற்றும் டயடீஷியன் துறைகளுக்கிடையிலான எளிய வேறுபாடுகள்:
டயடீஷியன்:
கிளீனிக்கல் மற்றும் தெரப்பியாடிக் டயடீஷியன் என்று பணிச் சூழல்களுக்கேற்றவாறு பெயர்கள் மாறுபடும். அந்த டயடீஷியன்கள் அடிப்படையில், நோயாளிகளுக்காக வடிவமைக்கப்பட்ட உணவுக் கட்டுப்பாடுகளை திட்டமிட்டு அமைக்கிறார்கள் மற்றும் மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், நல திட்டங்கள், விளையாட்டு மையங்களில் பணிபுரிகிறார்கள். மருத்துவமனைகளில் டயடீஷியன்கள் மருத்துவர்களுடன் நெருங்கி பணியாற்றி, குறிப்பிட்ட மருத்துவ துறையில் ஆய்வுகளை மேம்படுத்துகிறார்கள்.
நியூட்ரிஷன் நிபுணர்:
உணவு ஆராய்ச்சி, சமூக மேம்பாடு, ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் வேகமாக இயங்கும் நுகர்வோர் பயன்பாட்டு பொருள் தயாரிப்பு நிறுவனம்(எப்.எம்.சி.ஜி) போன்ற பல துறைகளில் இவர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களின் பணி, ஆய்வு சம்பந்தமானது. அப்பணியானது, வெளிஉலகம், அறை, ஆய்வகம் என்று எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். பொது சுகாதார நியூட்ரிஷன்கள், மேம்பாட்டு தளங்களில் பணியாற்றுகிறார்கள். உணவு கட்டுப்பாடு என்ற நிலையை தாண்டி, பயோகெமிஸ்ட்ரி, உணவு அறிவியல் போன்ற பரந்த நிலைகளில் செல்கிறார்கள். டயடீஷியன்களை போல இவர்களின் பணி 4 சுவர்களுக்குள்(மருத்துவமனை) அடங்குவதில்லை.
நியூட்ரிஷன் படிப்புகள்:
பத்தாம், 12ம் வகுப்புகளை முடித்தப் பின்னர் நியூட்ரிஷன் படிப்பை படிக்கலாம். இளநிலை மற்றும் முதுநிலையில் பல்வேறான நியூட்ரிஷன் படிப்புகள் உள்ளன. டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள பி.எஸ்சி ஹோம்சயின்ஸ் பிரிவில், உணவு – நியூட்ரிஷன் என்பது ஒரு பாடம். மேலும் 2 வகையான பாடத்திட்டங்கள் உள்ளன.
அவை,
பி.எஸ்சி. ஹோம்சயின்ஸ் (பாஸ்) மற்றும் (ஹானர்ஸ்).
ஹானர்ஸ் பிரிவில் ஒரு மாணவர் 2 மற்றும் 3ம் ஆண்டுகளில் உணவு – நியூட்ரிஷன் பிரிவில் சிறப்பு கவனம் செலுத்துகிறார். ஆனால் பாஸ் பிரிவில் அவ்வாறு சிறப்பு கவனம் இல்லை. ஹானர்ஸ் பிரிவில் பயோகெமிஸ்ட்ரி, தாவரவியல், இயற்பியல், விலங்கியல் மற்றும் வேதியியல் பிரிவுகளிலிருந்து வரும் அறிவியல் மாணவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளி படிப்பின்போது உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடங்களை சரியாக படிக்காத மாணவர்கள், இந்த கல்லூரி நிலை பாடத்திட்டத்தை புரிந்துகொள்ள சிரமப்படுவார்கள் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.
லேடி இர்வின் மற்றும் ஐ.எச்.இ. என்ற இரண்டு பிரபல கல்வி நிறுவனங்கள் இந்த நியூட்ரிஷன் படிப்பிற்கு அறிவியல் அல்லது அறிவியல் படிக்காத மாணவர்களை சேர்த்துக்கொள்கின்றன. பொதுவாக நீங்கள் படிப்பில் சேரும் முன்பாக, பாடதிட்டம் பற்றி தெளிவாக தெரிந்துகொள்வது நல்லது.
முதுநிலை படிப்பில், ஒருவருட முதுநிலை டிப்ளமோ டயடிக்ஸ் மற்றும் பொதுசுகாதார நியூட்ரிஷன்(டி.டி.பி.எச்.என்) படிப்பு அல்லது 2 வருட முதுநிலை படிப்பு ஆகிய இரண்டில் ஒன்றை படிக்கலாம். எம்.எஸ்சி. உணவு மற்றும் நியூட்ரிஷன் படிப்பானது, தெரப்யூடிக் நியூட்ரிஷன், பொது சுகாதார நியூட்ரிஷன் மற்றும் உணவு அறிவியல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் ஆய்வுக்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது.
மேலும் எம்.எஸ்சி. படிப்பில், ஆராய்ச்சி முறைகள் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், பயோ கெமிஸ்ட்ரி, உணவு மைக்ரோ பயாலஜி மற்றும் உணவு பாதுகாப்பு, உணவு அறிவியல் மற்றும் தரக் கட்டுப்பாடு, மேம்பட்ட மனித நியூட்ரிஷன், பிசியாலஜி மற்றும் உணவு அறிவியல் கோட்பாடுகள் போன்ற பொது பாடங்கள் உள்ளன.
ஆராய்ச்சி வாய்ப்புகள்:
சில கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சிக்கு அதிக காலம் செலவழிக்கின்றன. மேலும் சில கல்வி நிறுவனங்கள் முதுகலை பட்டம் முடித்தவர்களை பி.எச்டி. ஆய்வுக்கு எடுத்துக்கொள்கின்றன. அதேபோல் சில இடங்களில், 5 வருடங்களில் பி.எச்டி. முடித்துவிட முடியும்.
இந்த துறைக்கு தேவைப்படும் திறன்கள் மற்றும் திறனாய்வு:
* உணவு மற்றும் உணவு தயாரித்தலில் ஆர்வம்
* நல்ல மொழியறிவு மற்றும் உரையாடும் திறன் (தனிநபர் மற்றும் குழுக்களுடன்)
* அறிக்கைகள், ஆவணப்படுத்தல், சிறுகையேடுகள் போன்றவற்றுக்கான எழுத்துத்திறன்
* நல்ல ஆராய்ச்சி திறன்கள்
* சிக்கல்களை தீர்க்க புதிய வழிகளை கண்டுபிடிக்கும் திறன்கள்
* மக்களிடம் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை காட்டும் பண்பு
* திட்டமிடல், நிர்வாகத்திறன்கள் மற்றும் அமைப்பு திறன்கள்
உண்மையான சவால்:
சமூகத்தளம், மருத்துவமனை, கிளீனிக் மற்றும் ஆலோசனை மையங்களில் பணிபுரிபவர்களுக்கு எப்போதுமே சவால் உண்டு. நோயாளிகள், வாடிக்கையாளர்கள், கல்வியறிவற்ற பொதுமக்கள் ஆகியோரிடம் முறையான உணவு பழக்கவழக்கங்களை வலியுறுத்தி, அவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பது மிகவும் சிரமம். எனவே ஆரோக்கியம் என்ற ஒரு அம்சத்தை முன்னிறுத்தி நம் பணியை வெற்றிகரமாக செய்ய வேண்டியுள்ளது.
பெரியளவிலான வேலை வாய்ப்புகள்:
நெஸ்ட்லே, கேட்பரிஸ், யுனிலிவர், ஜி.எஸ்.கே, எலி லில்லி, நோவர்டிஸ் போன்ற பெரிய நிறுவனங்களில், ஆராய்ச்சி – மேம்பாடு மற்றும் மெடிக்கல் மார்கெடிங் போன்ற பணிகளுக்கு அதிகளவில் நியூட்ரிஷன்கள் தேவைப்படுகின்றனர். மேலும் இப்படிப்பு படித்தோருக்கான வேலை வாய்ப்புகள் மெதுவாக, அதேசமயம் நீடித்த அளவில் வளர்ந்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு அமைப்புகள்:
சமூக மற்றும் மேம்பாட்டு பணிகளில் நியூட்ரிஷன்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். மேலும் பொது சுகாதார துறைகளிலும் அவர்கள் தேவைப்படுகிறார்கள். உணவு – நியூட்ரிஷன் வாரியத்தில்(எப்.என்.பி), இருக்கும் பணியிடங்களை பொறுத்து, யு.பி.எஸ்.சி. நேர்முகத்தேர்வை நடத்துகிறது. நீங்கள் பணியமர்த்தப்பட்டால், கிளாஸ் -1 கெசடட் அதிகாரியாக ஆகலாம். அதிகளவிலான நியூட்ரிஷன்கள், ஆலோசகர், தொழில்நுட்ப ஆலோசகர் அல்லது உதவி ஆலோசகர்களாக பணியாற்றுகிறார்கள். நாடு முழுவதும் 43 நீட்டிப்பு/கள யூனிட்களில் நியூட்ரிஷன்களின் சேவை தேவைப்படுகிறது.
சம்பளம்:
படிப்பு, இருப்பிடம் மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் சம்பள விகிதம் மாறுபடுகிறது. சிறு நகரங்களில் பணியாற்றும் நியூட்ரிஷன்களை விட, பெருநகரங்களில் பணிபுரிபவர்களுக்கு வருமானம் அதிகம். அதேபோல் ஒரு மருத்துவமனையில் குறிப்பிட்ட சம்பளத்திற்கு பணிபுரியும் டயடீஷியனை விட, தனிப்பட்ட முறையில் வாடிக்கையாளர் வைத்திருக்கும் டயடீஷியனின் பொருளாதார நலன்கள் அதிகம்.
புதிதாக பணிக்கு வரும் ஒருவர், மாதம் 15000 முதல் 20000 வரை சம்பாதிக்கலாம். அனுபவம் பெற்றபிறகு, 30000 வரை சம்பாதிக்கலாம். மேலும் 6வது சம்பள கமிஷன் பரிந்துரையால் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிபவர்களுக்கு சம்பளம் 25000 வரை உயர்ந்துள்ளது. அதேசமயம் தனியார் துறைகளில் இடத்துக்கு இடம் சம்பளம் வேறுபடும்.
பெண்களே அதிக ஆதிக்கம் செலுத்தும் இத்துறையில் ஆண்களுக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த பணியின் மூலம், ஒரு நாட்டை ஆரோக்கிய பாதையில் செலுத்தும் மாபெரும் சேவையில் நாமும் பங்குகொள்ளும் அரிய வாய்ப்பினை பெறலாம்.
Leave a Reply