சென்னை: பாலிடெக்னிக் மாணவர்களுக்கான பாடத்திட்டம், அடுத்த ஆண்டு மாற்றப்படுகிறது.
மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்தும் வகையில், முதலாம் ஆண்டு ஆங்கிலப் பாடத்தில் பெருமளவில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. பாலிடெக்னிக் படிப்பில், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டம் மாற்றப்படும். அதன்படி, பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டம், அடுத்த ஆண்டு மாற்றப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டம் அதற்கு அடுத்த ஆண்டுகளில் மாற்றப்படவுள்ளது. இதற்கென பாடத்திட்டக்குழு அமைக்கப்பட்டு, மாதிரி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இவை, தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக இணையதளத்தில் ( www.tndte.com ) ஓரிரு நாட்களில் வெளியிடப்படுகின்றன.
இதுகுறித்து பாலிடெக்னிக் கல்லூரிகள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டு அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் குமார் ஜெயந்த் கூறியதாவது: கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் குறைந்த அளவே மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. ஆங்கிலப் பாடத்தில் பெரிய அளவிலான மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன. கட்டுரைப் பகுதி முற்றிலுமாக நீக்கப்படவுள்ளது. ‘காம்ப்ரஹென்சன்’ பகுதி எளிமைப்படுத்தப்படவுள்ளது. ‘காம்ப்ரஹென்ஷன்’ பகுதியில் பத்திரிகைகளிலிருந்து ஒரு கேள்வி கேட்கப்படும். இதில், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் படிக்கும் செய்திகள் தொடர்பான கேள்விகள் பகுதி இடம்பெறும்.
கடிதம் எழுதும் பகுதியும் மாற்றியமைக்கப்படும். வகுப்பில் 5 – 10 கடிதங்கள் சொல்லித்தரப்படும். ஆனால், தேர்வின்போது, இவற்றில் இல்லாமல் வேறு கடிதங்கள் எழுதும் முறை குறித்து கேட்கப்படும். அவற்றை பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் என்று கூறமுடியாது.
ஆங்கிலம் இரண்டு தாள்கள் இடம்பெறும். மாணவர்களின் ஆங்கில அறிவை வளர்க்கும் வகையிலும், புரிந்து கொள்வதற்கு முக்கியத்துவம் வழங்கும் விதத்திலும் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. பொறியியல் டிப்ளமோ பட்டம் பெறும் மாணவர்கள், பிற்காலத்தில் டிகிரி படிக்கும்போது, அவர்கள் ஆங்கிலத்தில் திறமையுடன் இருக்க இது உதவும்.
கம்ப்யூட்டர் பிராக்டிஸ் பகுதி இரண்டு தாள்களிலிருந்து ஒரு தாளாக குறைக்கப்படுகிறது. கணிதம் இரண்டு தாள்கள் இடம்பெறும். பிளஸ் 1, பிளஸ் 2 கணிதப் பாடத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் இந்த இரு தாள்களிலும் இடம்பெறும். இந்த மாற்றங்கள் பாடத்திட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வாறு குமார் ஜெயந்த் கூறினார்.
Leave a Reply