வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது இந்திய வருகையின் போது நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றைக்கூறி, தனது பத்திரிகை செயலர் ராபர்ட் கிப்சின் கால்கள் கன்றிப் போய்விட்டதாகச் சொல்லி சிரித்தார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, டில்லிக்கு வந்தவுடன், பிரதமர் மன்மோகன் சிங்குடன் கூட்டறிக்கை விடுவதற்காக பத்திரிகைகளுக்கான கூட்டம் ஒன்று, டில்லியில் உள்ள “ஐதராபாத் ஹவுஸ்’ல் நடந்தது. அதில் அமெரிக்க மற்றும் இந்தியா நிருபர்கள் பெரும் கூட்டமாக கலந்து கொண்டனர்.அந்த அறையில், இந்திய செய்தியாளர்கள் பெருமளவில் இருந்தனர். அமெரிக்க வெள்ளை மாளிகையின் எட்டு செய்தியாளர்களும் அந்த அறைக்குள் செல்ல முயன்ற போது, இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை தடுத்து, ஐந்து பேரை மட்டும் உள்ளே விட்டனர்.அச்சமயம் அங்கிருந்த, ஒபாமாவின் பத்திரிகை செயலர், ராபர்ட் கிப்ஸ், எட்டு பேரையும் உள்ளே விட வேண்டும் என்று கூறி, இந்திய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனாலும் அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில், அந்த அறையின் கதவை இந்திய அதிகாரிகள் அடைக்க விடாமல், கிப்ஸ் தன் காலை குறுக்கே வைத்துக் கொண்டார். பின் பலம் கொண்ட மட்டும் கதவை திறக்க முற்பட்டு, சத்தம் போட்டார்.
எட்டு பேரையும் உள்ளே விடாவிட்டால், ஒபாமாவை வெளியே இழுத்து வந்து விடுவதாகவும் அவர் கத்தினார். இதனால் இருதரப்பினர் இடையேயும் காரசாரமான வாக்குவாதம் உரத்த சத்தத்தில் ஏற்பட்டது. பின் ஒரு வழியாக இருதரப்பும் சமாதானமாகி, எட்டு பேரும் உள்ளே அனுப்பப்பட்டனர்.
இதுகுறித்து வாஷிங்டனில் நேற்று பேட்டியளித்த ஒபாமா, “கிப்ஸ் ஒரு நல்ல காரியத்திற்காக தான் தன் காலை குறுக்கே வைத்தார். அவரது கால் இப்போது கன்றிப் போயிருக்கும் என நினைக்கிறேன்’ என்று சொல்லி சிரித்தார்.
Leave a Reply