புதிய முதல்வர் ரெட்டிக்கு ஒரு வாரத்திற்குள் சிக்கல்

posted in: அரசியல் | 0

ஐதராபாத்:காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியுள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு, 36 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுவதால், ஆந்திராவின் புதிய முதல்வராக பதவியேற்ற ஒரு வாரத்துக்குள்ளேயே, கிரண்குமார் ரெட்டிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்தும், லோக்சபா எம்.பி., பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார், ஜெகன்மோகன் ரெட்டி. அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,”எனக்கு ஆதரவு தெரிவித்து, கட்சி எம்.எல்.ஏ.,க்கள் யாரும், தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டாம்’ என்றார். இருந்தாலும், ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர்கள், ஜெகனுக்கு பின், அணி திரள்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஆந்திர அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:ராஜசேகர ரெட்டி மறைவுக்கு பின், ஜெகன் முதல்வராக வேண்டும் என, நூற்றுக்கும் மேற்பட்ட காங்., எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். தற்போது இந்த அளவுக்கு அவருக்கு ஆதரவு இல்லை. வெறும் 36க்கும் குறைவான எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவே அவருக்கு உள்ளது. மேலும், நான்கு லோக்சபா எம்.பி.,க்களின் ஆதரவும் அவருக்கு உள்ளது. இருந்தாலும், ஜெகனுக்கு ஆதரவாக இவர்கள் செயல்படுவர் என, உறுதியாக கூற முடியாது. காங்கிரஸ் மேலிடத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பொறுத்திருந்து பார்த்து, அதற்கு பின் தங்கள் முடிவுகளை வெளிப்படையாக அறிவிக்கலாம் என்றும் சில எம்.எல்.ஏ.,க்கள் கருதுகின்றனர். ஜெகன் விஷயத்தில் அவசரம் காட்டக் கூடாது என்பது அவர்களது எண்ணம்.இவ்வாறு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து ஜெகன் ஆதரவாளர் ஒருவர் கூறுகையில்,”தற்போது 36 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. பிரஜா ராஜ்யம் கட்சியைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.,க்களும் எங்களுக்கு விரைவில் ஆதரவு தெரிவிப்பர்’ என்றார்.ஜெகனின் ராஜினாமாவால் ஏற்பட்ட பரபரப்பை அடுத்து, டில்லி சென்றிருந்த ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, நேற்று அவசரமாக ஐதராபாத் திரும்பினார். கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுடன், இதுகுறித்து அவர் ஆலோசனை நடத்தினார். கவர்னர் மாளிகையில், கவர்னர் நரசிம்மனை சந்தித்தும், அவர் நிலைமையை விளக்கியதாகவும் தகவல்கள் வெளியாயின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *