பெங்களூரு : தங்க செயின் திருடியதாக சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்ற பெண்ணுக்கு, கோத்தனூர் போலீஸ் நிலையத்தில் மின்சார ஷாக் கொடுத்து, மனநிலை பாதிப்பை உண்டாக்கி சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு பிரேசர் டவுன் பகுதியில் வசிப்பவர் கஸ்தூரி (35). இவர், டேனரி ரோட்டிலுள்ள மாநகராட்சி பூங்காவில் பராமரிப்பு பணி செய்து வருகிறார். உடல்நலம் சரியில்லாத கணவர் மற்றும் தன் இரண்டு மகன்களுடன், அருகிலுள்ள ஷெட் ஒன்றில் வசித்து வருகிறார்.கடந்த திங்கள்கிழமை மதியம் 3 மணியளவில், அங்கு வந்த நான்கு போலீஸ்காரர்கள், கஸ்தூரியை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும்படி அழைத்தனர். தன் தாயாரை போலீசார் அழைப்பதை பார்த்து, மிரண்டு போன அவரது மகன் அஜித் (13), தானும் உடன் வருவதாக கூறினான். அவர்கள் இருவரும் ஆம்னி கார் ஒன்றின் மூலம் கோத்தனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.அங்கு, முதல் மாடியிலுள்ள அறைக்கு கஸ்தூரி அழைத்து செல்லப்பட்டார். அங்கு ஏற்கனவே இருந்த வீரா என்பவன், கஸ்தூரியை காண்பித்து, இவரிடம் தான் தங்க செயின் இருப்பதாக கூறியவுடன், பெண் போலீஸ் ஒருவர், கஸ்தூரியை லத்தியால் தாறுமாறாக அடிக்க துவங்கினார். தங்க செயினை எங்கே வைத்திருக்கிறாய் என்று கேட்டு விடாமல் அடிக்கவே, வலி பொறுக்க முடியாத கஸ்தூரி, தனக்கு ஏதும் தெரியாது என்று கண்ணீர் விட்டு கதறினார்.
அவரது அலறல் சத்தத்தை கேட்ட அவரது மகன் அஜித் மாடிக்கு ஓடினான். தன் தாயாரை போலீசார் அடிப்பதை பார்த்து, பயந்து போய், “என் அம்மாவுக்கு எதுவும் தெரியாது. அவரை அடிக்காதீர்கள். விட்டு விடுங்கள்’ என்று கெஞ்சினான். மதியம் ஆரம்பித்த அடியுடன் கூடிய விசாரணை இரவு 9 மணி வரை தொடர்ந்தது.பொதுவாகவே மாலை 6 மணிக்கு மேல், பெண் கைதிகளை போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருக்க கூடாது என்பது விதிமுறை. குழந்தைகளையும், உடன் வைத்திருக்க கூடாது. 13 வயதான அஜித்தையும், உடன் வைத்து கொண்டு நடந்த இந்த விசாரணையில், கஸ்தூரிக்கு மின்சார ஷாக் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், கஸ்தூரி குற்றமற்றவர் என்பதை உணர்ந்த போலீசார், அவர்களை மீண்டும் வேனில் ஏற்றி பிரேசர் டவுனில் ஓட்டல் ஒன்றின் அருகில் இறக்கி விட்டு சென்று விட்டனர்.போலீசாரின் கொடூர தாக்குதல்களாலும், மின்சார ஷாக்கினாலும் பாதிக்கப்பட்ட கஸ்தூரி, தற்போது, அடிக்கடி மனநிலை பாதிக்கப்பட்டவராக காணப்படுகிறார். “என்னை அடிக்காதீர்கள், எனக்கு ஒன்றும் தெரியாது’ என்று சொல்லி மிரண்டு போய் காணப்படுகிறார். இதை பார்த்த அவரது உறவினர்கள், மாநில மனித உரிமை கமிஷனின் பிரகாஷ் கரியப்பாவிடம் விஷயத்தை கொண்டு சென்றனர். இவர்களை கொண்டு வந்து விடும் போது, இந்த விசாரணை பற்றியோ, எங்களை பற்றியோ வெளியில் ஏதாவது சொன்னால், உன்னையும், உன் தந்தையையும் கொன்று விடுவோம் என்று சொல்லி போலீசார் மிரட்டியுள்ளனர், என்ற தகவலும் கிடைத்துள்ளது.கஸ்தூரிக்கு மின்சார ஷாக் கொடுத்தது குறித்து சிகிச்சை அளித்த விக்டோரியா மருத்துவமனை மூத்த டாக்டர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். பின்னர், இந்த புகாரை மாநில மனித உரிமை கமிஷன் மூலம் பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம் என்று பிரகாஷ் கரியப்பா கூறினார்.
கோத்தனூர் போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொண்ட போது, விசாரணைக்காக ஒரு பெண்ணை அழைத்து வந்தது உண்மை. ஆனால், மின்சார ஷாக் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று மறுத்தனர்.
Leave a Reply