பெற்றோர் – ஆசிரியர் சங்க கூட்டத்தில் போலீசும் பங்கேற்க வேண்டும்: கமிஷனர் பேச்சு

posted in: மற்றவை | 0

சென்னை: பள்ளிகளில் நடக்கும் பெற்றோர் – ஆசிரியர் சங்க கூட்டத்தின் போது, போலீஸ் அதிகாரிகளும் இடம் பெற வேண்டும் என, குழந்தைகள் கடத்தல் தடுப்பு குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் வழிநடத்துதல் குறித்த கலந்தாய்வு கூட்டம், போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், சென்னையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளின் முதல்வர்கள், “துளிர்’ அமைப்பின் நிர்வாகி வித்யாரெட்டி, அப்போலோ மருத்துவமனை மனோதத்துவ டாக்டர் சபியா சுல்தானா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கலந்தாய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது: கடந்தாண்டு செப்டம்பரில் இதே போன்று கூட்டம் நடத்தப்பட்ட போது அதில், பள்ளியின் முன்பு கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், பெரும்பான்மை பள்ளிகள் கேமரா அமைக்கவில்லை. இந்த கூட்டத்தில் அனைவரும் கேமரா வைப்பதாக உறுதியளித்துள்ளனர். பள்ளி குழந்தைகளுக்கு வீட்டில், பள்ளியில் மட்டுமல்லாது போக்குவரத்தின் போதும் பாதுகாப்பு தேவைப்படுகிறது. பள்ளியில் நடக்கும் பெற்றோர் – ஆசிரியர் சங்க கூட்டத்தின் போது, அந்தந்த பகுதி உதவி கமிஷனர் அல்லது இன்ஸ்பெக்டர் இடம்பெற வேண்டும். பள்ளிகளில் கவுன்சிலிங் மையம் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட வேண்டும். பள்ளியில் பயிற்சி பெற்ற காவலாளியை நியமித்து, மாணவர்கள் வரும்போதும், வெளியில் செல்லும் போதும் கண்காணிக்க வேண்டும். காவலாளிகள் உள்ளூர் போலீஸ் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும். இது தவிர, குழந்தைகளை ஏற்றிச் செல்லும் டிரைவர்களுக்கு, அடையாள அட்டை வழங்குவதுடன், அவரது விவரமும் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர் அறிந்திருக்க வேண்டும்.

கம்ப்யூட்டர்களை பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தும் போது, பல்வேறு சம்பவங்கள் நிகழ்கின்றன. இவை கட்டுப்படுத்தப்பட வேண்டியது தொடர்பாக ஆசிரியர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்பட்டன. தவறு செய்யும் குழந்தைகளை தண்டித்தால், பெற்றோர் பள்ளியில் வந்து புகார் தெரிவிப்பதால், பெற்றோரையும் அழைத்து கூட்டம் நடத்த வேண்டும் என தலைமையாசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கமிஷனர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், கூடுதல் கமிஷனர்கள் ஷகீல் அக்தர், சஞ்சய் அரோரா, இணை கமிஷனர்கள் சக்திவேலு, சேஷசாயி, தாமரைக்கண்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு புகார் பிரிவு என்ன ஆச்சு? போலீஸ் அதிகாரிகள், பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்தாய்வு கூட்டத்தில், “துளிர்’ அமைப்பின் நிர்வாகி வித்யா ரெட்டி பேசியதாவது: ஆண்டுக்கு 300 நாட்களில் பெரும்பான்மை நேரம் பள்ளியில் குழந்தைகள் இருக்கின்றனர். இதை பயன்படுத்தி பலர் குழந்தைகளை பல்வேறு விதங்களில் பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மீது குற்றம் சாட்டப்படும் போது, அவர்கள் மாற்றலாகி வேறு பள்ளிக்கு சென்று, மீண்டும் அதே செயல்களில் ஈடுபடுகின்றனர். தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டசபையில் குழந்தைகளுக்கெதிரான குற்ற புகார் பிரிவு அமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த பிரிவு என்ன செய்கிறது என்பதே தெரியவில்லை. இவ்வாறு வித்யா ரெட்டி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *