பெற்றோர் உஷார் : 15 நாளில் 11 மாணவ, மாணவியர் மீட்பு

posted in: மற்றவை | 0

பள்ளி நேரத்தில் சீருடையுடன் பொது இடங்களில் சுற்றித்திரியும் மாணவ, மாணவியரை பிடித்து, பெற்றோரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை கோவை மாநகர போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த 15 நாளில் 11 மாணவ, மாணவியர் மீட்கப்பட்டுள்ளனர்.

கோவை நகரில், துணிக்கடை அதிபர் ரஞ்சித்குமாரின் மகள் முஸ்கன்(11), மகன் ரித்திக்(8) ஆகியோர் கால் டாக்சியில் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின், மற்ற பள்ளி குழந்தைகளின் பெற்றோரிடையே ஒருவிதமான பீதியும், அச்சமும் நிலவுகிறது. பள்ளிக்குச் செல்லும் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க துவங்கியுள்ளனர். பள்ளியில் இருந்து வீடு திரும்ப தாமதமானால் கூட, உடனடியாக வாடகை வாகன டிரைவர் மற்றும் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விசாரிக்கும் அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி நேரத்தில் பார்க், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் சீருடையுடன் சுற்றித்திரியும் மாணவ, மாணவியர் குறித்தும் போலீசாருக்கு உடனடியாக போனில் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் சிங்காநல்லூர் அருகிலுள்ள இந்திரா கார்டனில் தனியார் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் வகுப்புக்குச் செல்லாமல் சீருடையுடன் சுற்றித்திரிந்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள், சிங்காநல்லூர் போலீசுக்கு போனில் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸ் அதிகாரிகள் 6, 7 மற்றும் 8ம் வகுப்பில் பயிலும் நான்கு மாணவர்களை மீட்டு ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், நான்கு பேரும் “ஹோம் வொர்க்’ பாட திட்டங்களை முடிக்காததாலும், வகுப்புக்குச் சென்றால் ஆசிரியர் மிரட்டுவாரே என பயந்தும், வகுப்புக்கு செல்லாமல் “கட்’ அடித்தது தெரியவந்தது. இதையடுத்து, பெற்றோரை வரவழைத்த போலீசார், அறிவுரை கூறி மாணவர்கள் நால்வரையும் உடன் அனுப்பி வைத்தனர்.

நான்கு நாட்களுக்கு முன் சிங்காநல்லூர் படகுத்துறை அருகே பள்ளிச்சீருடையுடன் மாணவி ஒருவர், மாணவருடன் தனிமையில் அமர்ந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், இருவரையும் பிடித்து விசாரித்தனர். அந்த மாணவியின் வயது 13 என்றும், பள்ளிக்குச் செல்லாமல் சக மாணவருடன் காதல் வயப்பட்டு சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. இருவரின் பெற்றோரையும் அழைத்த போலீசார், தகுந்த அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். தங்களது மகளின் நடத்தையை அறிந்து வேதனையடைந்த பெற்றோர் கண்ணீர்விட்டபடியே வீட்டுக்கு அழைத்துச் சென்றதாக, போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து, மாநகர போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பள்ளி குழந்தைகளின் நடத்தையை வகுப்பு ஆசிரியர்களும், பெற்றோரும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வீட்டிலிருந்து கிளம்பிச் செல்லும் பிள்ளைகள் முறையாக வகுப்புக்கு ஆஜராகிறார்களா, கல்வி கற்பதில் நாட்டம் குறைந்திருக்கிறதா, அதற்கான காரணம் என்ன என்பது குறித்து வகுப்பு ஆசிரியர்களுடன் அவ்வப்போது பெற்றோர் பேசி அறிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப தங்களது அணுகுமுறைகளையும், கண்காணிப்பையும் மாற்றியமைக்க வேண்டும். இல்லாவிடில், குழந்தைகளின் எதிர்காலம் பாழாகிவிடும். இரு மாதங்களுக்கு முன், நகரிலுள்ள தனியார் பள்ளியில் 5 மற்றும் 6ம் வகுப்பில் பயிலும் ஐந்து மாணவர்கள் திடீரென வீட்டிலிருந்து வெளியேறினர். செல்லும்போது தங்களிடம் இருந்த சைக்கிள்களை விற்றுவிட்டு ரயிலில் சென்னைக்குச் சென்றுவிட்டனர். பெற்றோர் அளித்த புகாரை தொடர்ந்து ஐந்து மாணவர்களையும் மீட்டோம்.

அடுத்ததாக கோவை, சுங்கம் அருகிலுள்ள தனியா பள்ளியில் பயிலும் மூன்று மாணவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி, கர்நாடகாவுக்கு செல்லும் திட்டத்துடன் உக்கடம் பஸ் ஸ்டாண்டில் சுற்றித்திரிந்தனர். ஒரு மணி நேர தேடலுக்கு பின் மாணவர்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தோம். இச்சம்பவங்கள் மேலும் தொடராமல் இருக்க பள்ளி நிர்வாகங்களும், பெற்றோரும் மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விழிப்புணர்வு மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும்; போலீசாரின் நடவடிக்கையால் மட்டுமே, இச்சம்பவங்களை தடுக்க முடியாது.இவ்வாறு, போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.

“அடுத்தடுத்து கடத்தல்’ ஐ.ஜி., நேரில் விசாரணை : உடுமலையில், சமீபத்தில் பள்ளிக்குச் சென்ற மாணவனை காரில் கடத்திய மர்ம நபர்கள், கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்யமுயன்றதாக புகார் எழுந்தது. அடுத்த இரு நாட்களில் மாணவி ஒருவரை காரில் கடத்த முயற்சி நடந்ததாக புகார் கிளம்பியது. இவ்விரு சம்பவங்களால் அதிர்ச்சிக்குள்ளான உடுமலை போலீசார், “கடத்தல் புகார்களின் பின்னணி’ குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி., சிவனாண்டி நேற்று உடுமலை பகுதிக்கு திடீர் விசிட் செய்து, போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். மேலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, அந்தந்த ஸ்டேஷன் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்கான நடவடிக்கை வழிமுறைகளை விளக்கவும் உத்தரவிட்டார். இது குறித்து ஐ.ஜி., சிவனாண்டி கூறுகையில், “”உடுமலையில் மாணவ, மாணவியை கடத்த முயற்சி நடந்ததாக கூறப்படுவது குறித்து விசாரிக்கிறோம். புகார்களை அலட்சியப்படுத்தாமல் உண்மை கண்டறியும் விதத்தில் தீவிர விசாரணை நடக்கிறது,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *