ஐ.டி., மற்றும் பி.பி.ஓ., போன்ற துறைகளின் சிறப்பான வளர்ச்சி இந்திய பொருளாதார மேம்பாட்டிற்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளன.
இந்நிலையில், மூன்றாவதாக ஒரு அம்சம், எதிர்காலத்தில் மிகப்பெரிய துறையாக, ஐ.டி மற்றும் பி.பி.ஓ துறைகளில் ஒரு மாற்று சக்தியாக உருவெடுக்கும் வாய்ப்பில் இருக்கிறது. அதுதான் ‘நாலேட்ஜ் ப்ராசசிங் அவுட்சோர்சிங்’ எனப்படும் கே.பி.ஓ.
நம்மில் பலருக்கும் பி.பி.ஓ என்றால் என்ன என்று ஓரளவு தெரியும். கே.பி.ஓ என்பது அந்த பி.பி.ஓ என்பதன் ஒரு சிறிய விஸ்தரிப்புதான். அதேசமயம் இந்த இரண்டுக்கும் ஒரு எழுத்து மட்டுமே மாறியிருக்கிறது என்றும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் கே.பி.ஓ என்பது முற்றிலும் ஒரு அறிவு செயல்பாடு.
இந்த செயல்பாட்டில் ஒரு மனிதனின் திறமை, அவரின் குறிப்பிட்ட துறைப் பற்றிய அறிவு, அனுபவம் போன்றவை முழு அளவில் சம்பந்தப்பட்டுள்ளன. இந்த அறிவு செயல்பாடானது, வெளியிடங்களுக்கு பணத்தின் பொருட்டு பரிமாறப்படுகையில், கே.பி.ஓ -ஆக வளர்ச்சியடைகிறது.
பி.பி.ஓ என்பது அதன் அளவு, தொகுதி, சாமர்த்தியத்துடன் கூடிய திறன் போன்றவற்றை ஆதாரமாக கொண்டுள்ளது, அதேசமயம் கே.பி.ஓ என்பது, ஒருவரின் ஆழ்ந்த அறிவு, அனுபவம், மற்றும் தீர்மானிக்கும் திறன் போன்றவற்றை சார்ந்துள்ளது.
இந்த கே.பி.ஓ துறையின் வளர்ச்சி தற்போது ஆரம்ப நிலையிலேயே இருந்தாலும், இந்தியாவில் இதன் எதிர்கால வாய்ப்பானது மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஏனெனில் நம் நாட்டில் நன்கு படித்த மனித வளம் மிக அதிகம். முக்கியமாக பொறியியல், பயோடெக்னாலஜி, அனிமேஷன், மருத்துவம் மற்றும் சட்டத் துறைகளில் கே.பி.ஓ வாய்ப்புகள் அதிகம்.
கடந்த பல வருடங்களாக ஐ.டி., பி.பி.ஓ., துறைகளில் வெற்றிகரமாக ஈடுபட்ட நிறுவனங்கள் தற்போது கே.பி.ஓ., துறையில் கவனத்தை திருப்ப தொடங்கியுள்ளன. இதை ஒரு பெரிய லாபகரமான துறையாக அவை கருத தொடங்கியுள்ளன. தற்போது பி.பி.ஓ துறையில் வங்கியியல், நிதி சேவைகள், காப்பீடு, தயாரிப்பு, மருந்தியல் போன்ற துறைகள் மிக முக்கியமாக உள்ளன. மேலும் இவை நன்கு வளர்ச்சியடைந்தும் உள்ளன.
மேலும் இந்தியா தனது புதிய போட்டியாளர்களிடம் ஐ.டி மற்றும் பி.பி.ஓ துறையில் பல வாய்ப்புகளை இழந்துவருகிறது. எனவே இந்நாடு எதிர்காலத்தில் தனது பொருளாதார வாய்ப்புகளை தக்கவைத்துக்கொள்ள கே.பி.ஓ போன்ற துறைகளில் தனது கவனத்தை செலுத்தி, அதன்மூலம் தரமான வாடிக்கையாளர் சேவையில் தனது இடத்தை உறுதிசெய்து கொள்ளவேண்டும் என்றே நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் கே.பி.ஓ., எதிர்காலத்தில் அவுட்சோர்சிங் துறையில் அதிக பணப்புழக்கத்தை சந்திக்கும்.
கே.பி.ஓ துறையானது, தகவல் தொழில்நுட்பம் அல்லது அது சம்பந்தப்பட்ட துறைகளில் மட்டுமே வேலை வாய்ப்பை தருவதில்லை. அறிவுசார் சொத்துரிமை சம்பந்தப்பட்ட சேவைகள், வணிக ஆய்வு மற்றும் பகுப்பாய்வு, சட்டப்பூர்வ ஆய்வு, கிளினிக்கல் ஆய்வு, வெளியீடு, சந்தை ஆய்வு போன்ற பல துறைகளிலும் வேலை வாய்ப்பை வழங்கும் துறையாக எதிர்காலத்தில் வளர்ச்சியடையும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அமெரிக்காவிலுள்ள சட்ட நிறுவனங்கள், அது சம்பந்தமான ஆலோசனைகளுக்காக, மணிக்கு 400 -450 டாலர்கள் வசூலிக்கின்றன. ஆனால் அதேவேலையை நாம் இங்கே மணிக்கு 75 -100 டாலர்களுக்கு செய்ய முடியும்.
இந்திய சூழலில், பொறியியல் வல்லுநர், மருத்துவர், சி.ஏ, வழக்கறிஞர், ஆர்கிடெக்ட், பயோடெக்னாலஜிஸ்ட், எகனாமிஸ்ட், புள்ளியியல் வல்லுநர் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரி போன்றவர்களுக்கு அவர்களின் துறைகளில் கிடைக்கும் வருமானத்தை விட, 25 -50௦ ௦சதவீதம் அதே துறை சம்பந்தப்பட்ட கே.பி.ஓ பணிகளுக்கு கிடைக்கிறது.
கே.பி.ஓ துறையில் இந்திய சூழல்:
தற்போது இந்தியாவில் குறைந்த அளவிலான மாணவர்களே இந்த துறையில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். காரணம், நமது பல்கலைக்கழக கல்வி திட்டம், இத்துறையின் தொழில்சார்ந்த தேவைகளை நிறைவு செய்வதாக தற்போது இல்லை. அதேசமயம் சில நாடுகள், இந்த துறையில் வாய்ப்புகளை அதிகளவில் பெறும்பொருட்டு, தமது பல்கலைக்கழகங்களுக்கு, இத்துறைக்கேற்ப பாடத்திட்டங்களை மாற்றியமைக்கும் சுதந்திரத்தை வழங்கியுள்ளன. எனவே இந்தியாவும் தனது முடிவை விரைவாக எடுக்க வேண்டும். அதன் மூலமே இந்திய மாணவர்கள் எதிர்காலத்தில் பயன்பெற முடியும்.
அடுத்த சில வருடங்களில், வாடிக்கையாளர்கள் இந்த துறையில் சிறந்த சேவையை எதிர்பார்த்து, அதற்காக அதிக செலவுசெய்ய தயாராக இருப்பார்கள். திறமையை வளர்த்துக் கொள்வதானது இந்த தொழிலில் உள்ள மிகப்பெரிய சவாலாகும். கே.பி.ஓ தொழிலின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.
அதேசமயம் இந்த துறையில், உயர்ந்த தரம், பெரியளவிலான முதலீடு மற்றும் திறன் பற்றாக்குறை போன்ற அம்சங்களையும் யோசிக்க வேண்டியுள்ளது. ஆனால் அதேசமயம் மாறும் சூழல்களுக்கேற்றவாறு மாற்றிக்கொண்டு, புதிய அம்சங்களோடு திகழ்ந்தால், வருங்கால போட்டி சூழலில் நிலைத்து நிற்க முடியும். எனவே அதற்கான முயற்சிகளைத் தொடங்க இதுவே சரியான நேரம்.
Leave a Reply