பொதுத்துறை – தனியார் துறை திட்டங்களில் சி.ஏ.ஜி., ஆய்வுக்கு பிரதமர் வலியுறுத்தல்

posted in: அரசியல் | 0

புதுடில்லி:”பொதுத்துறை – தனியார் இணைந்து மேற்கொள்ளும் திட்டங்கள் தொடர்பான கணக்குகளை ஆய்வு செய்ய, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்திற்கு அனுமதியளிக்கப்படும்’ என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.


“2ஜி’ ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்த முறைகேட்டை, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம்(சி.ஏ.ஜி.,) வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தின் பெயர்ச் சுருக்கமான, “சி.ஏ.ஜி.,’ சமீபகாலமாக பிரபலம் ஆகிவிட்டது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து, சி.ஏ.ஜி., விடுத்த அறிக் கை, பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில், மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தின், 150 ஆண்டு விழா கொண்டாட்டத்தை யொட்டி, டில்லியில் நேற்று நடந்த விழாவில், பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அவ்விழாவில், பிரதமர் பேசியதாவது:பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் உடன் இணைந்து மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பான கணக்கு விவரங்களை ஆய்வு செய்ய, சி.ஏ.ஜி., ஆடிட்டர் அனுமதி அனுமதியளிக்கப்படும்.

புதிதாக துவக்கப்பட்டு கட்டுமானத் திட்டங்களில் வெளிப்படையான அணுகுமுறை இருப்பதற்கு இது வழி வகுக்கும்.பொதுத்துறை – தனியார் இணைந்து மேற்கொள்ளும் திட்டங்கள் மேம்பாடு அடையவும், என்ன நடக்கிறது என்பது பற்றி வெளிப்படையாக தெரிய வேண்டும். இதில் முழுக்க முழுக்க பொதுமக்கள் நலன் சம்பந்தப்பட்டு இருப்பதாலும், கடும் போட்டி காரணமாக இது அவசியமானதாகிறது.மத்திய அரசு மற்றும் பல மாநில அரசுகள், பொது மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் பல்வேறுவிதமான கட்டுமானத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கட்டுமானத்துறையை மேம்படுத்துவது தான் அரசின் இப்போதையை தலையாய பிரச்னையாக உள்ளது.

இதில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது அவசியமாகிறது.பொது – தனியார் ஒத்துழைப்பில் கட்டுமானத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.முன்னதாக, விழாவில் பேசிய மத்திய ஆடிட்டர் ஜெனரல் வினோத் ராய், “பொது மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களில், பொதுப்பணம் பெருமளவில் முதலீடு செய்யப்படுவதால், அதுபற்றிய கணக்குகளை, சி.ஏ.ஜி., ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *