மனிதநேய ஆய்வில் பல்கலை மாணவர்கள் : பட்டமளிப்பு விழாவில் பிரதமர் தகவல்

posted in: மற்றவை | 0

புட்டபர்த்தி : “”பல்கலைக்கழக மாணவர்கள், மனிதநேய ஆய்வில் அதிகம் ஈடுபட வேண்டும்,” என, புட்டபர்த்தி சத்யசாயி இன்ஸ்டிடியூட் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

புட்டபர்த்தி சத்யசாயி உயர்கல்வி நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 29வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் 23 மாணவர்களுக்கு பகவான் சாய்பாபா பட்டங்களை வழங்கினார்.

பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்தி, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:சத்ய சாய்பாபாவின் 85வது பிறந்த நாள் விழா நடக்க இருப்பதையொட்டி அவருக்கு வாழ்த்து கூறுவதுடன், அவர் நீண்ட காலம் வாழ்ந்து, சமுதாயத்துக்கு பணி செய்யவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன். சத்யசாய் பல்கலைக்கழகத்தில், 1995ம் ஆண்டு நடந்த 14வது பட்டமளிப்பு விழாவிற்கு வந்து சென்ற பிறகு, இப்போது மீண்டும் வருகிறேன். இந்த நகரம் அகில உலக தரத்துக்கு மேம்பட்டுள்ளது.மொழியாலும், கலாசாரத்தாலும், இனத்தாலும் நாம் வேறுபட்டாலும், ஒற்றுமையுடன் வாழும் நாடாக இந்தியா உள்ளது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள், இந்தியாவை வளமிக்க நாடாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பகவான் சாய்பாபா பெயரில் நடந்து வரும் கல்வி நிறுவனங்களில், சிறந்த முறையிலும், எளிய முறையிலும் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது.ஒற்றுமை, தியாகம், தன்னொழுக்கம், சுயசிந்தனை, சுயசேவை ஆகியவை அடங்கிய தரமான கல்வி மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த முறையை நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களும் தற்போது கடைபிடித்து வருகின்றனர். இதன் மூலம் மாணவர்களின் திறமை வெளிப்படுவதுடன், கல்வி சார்ந்த அறிவையும் வளர்த்து கொள்கின்றனர். உலக தரத்துக்கான நவீன சமுதாயத்தை படைப்பதன் மூலம், வறுமையும் ஒழிக்கப்பட்டு, சமுதாயத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

அறிவியல், கலை, தொழில்நுட்பம் உட்பட பல்வேறு பிரிவுகளில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு, நல்ல முடிவுகளை வெளியிடுகின்றனர். ஆய்வுகளை மேம்படுத்தும் வகையிலும், நாட்டின் ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில், மனிதநேயத்தை வளர்க்க உதவ வேண்டும்.இதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் மனிதநேயம் தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும். இதை நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் கடைப்பிடித்தால், நாம் எதிர்பார்க்கிற மனிதநேயத்தை நாடு முழுவதும் காண முடியும்.குக்கிராமங்களிலிருந்து நகர பகுதி வரை அனைத்து பகுதியிலும் குடிநீர், கல்வி, மருத்துவம் போன்ற பல்வேறு உதவிகளை சத்ய சாய்பாபா செய்து வருவது வரவேற்கத்தக்கது.இவ்வாறு பிரதமர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *