புதுடில்லி : “கோடிக்கணக்கான மக்கள் பணம் அரசுக்கு இழப்பாகியிருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த பிறகும், மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் ராஜாவுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது.
இது பெருத்த அவமானம்’ என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
“எதிர்க்கட்சிகள் வற்புறுத்தலால் பதவி விலக மாட்டேன்’ என அமைச்சர் ராஜா திட்டவட்டமாகக் கூறினார். அவருக்கு ஆதரவாக முதல்வர் கருணாநிதியும் பேட்டியளித்தனர். இதை தொடர்ந்து, டில்லியில் பா.ஜ., கட்சி செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: மத்திய தணிக்கை கணக்கு அதிகாரி அறிக்கை வெட்ட வெளிச்சமாக வந்த பிறகு, சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும் வழக்கில், மத்திய அரசு அளித்த பதில் மனுவில் ராஜாவுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது. தி.மு.க., தலைவர் கருணாநிதியும் ராஜாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். தி.மு.க., தொடர்ந்து தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராஜாவை தக்க வைத்து, அவரை பாதுகாத்து வருகிறது. மேலும், ராஜா தனது நடவடிக்கை சரியென்று சொல்லும் போது எல்லாம், பிரதமருக்கு தெரிந்து தான் அனைத்து நடவடிக்கை நடந்துள்ளது என்கிறார். பிரதமர் பெயரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால், பிரதமர் உடனடியாக தலையிட்டு, நாட்டு மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்.
2ஜி ஏலம் தொடர்பான முடிவு காபினட்டால் எடுக்கப்பட்டதா அல்லது மத்திய தொலைத்தொடர்புத் துறை எடுத்ததா என்பது பற்றி விளக்க வேண்டும். முந்தைய அரசு முடிவையே இந்த அரசு பின்பற்றுகிறது என்றால், முன்பு 2001ல் நிர்ணயிக்கப்பட்ட விலையை 2008ல் மீண்டும் பின்பற்றியது ஏன். தவிரவும் முன்பு தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவை எடுத்த முடிவில், அடுத்து வரும் முடிவுகள் அவ்வப்போது அமைச்சரவையால் முடிவு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது. இது காபினட் அமைச்சர்களுக்கு தெரிந்த விஷயம். மேலும், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விற்ற முறை சரி என்றாலும், ஏன் “3ஜி’ ஸ்பெக்ட்ரம் விற்பனை முறையை மாற்றி அதிக வருவாயாக அரசு 60 ஆயிரம் கோடி ரூபாய் ஈட்டியது? இவ்வாறு பிரகாஷ் ஜாவேத்கர் கூறினார்.
Leave a Reply