ராஜா விவகாரத்தில் சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் தொலைத்தொடர்புத் துறை செயலர் ஆகியோரிடம் விசாரணை நடத்தாதது ஏன் என்று சி.பி.ஐ.,யிடம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

“2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையை நீதிமன்ற கண்காணிப்பிற்கு உட்படுத்தக் கோரி, பொது நல வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை எதிர்த்து, சி.பி.ஐ., தரப்பில் மூத்த வக்கீல் வேணுகோபால் வாதிட்டார். அவரிடம் சி.பி.ஐ., தாக்கல் செய்த, முதல் தகவல் அறிக்கை தொடர்பாக நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி சில கேள்விகளை எழுப்பினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: “2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக, ஊழல் கண்காணிப்பு ஆணையர் அளித்த கடிதத்தின் அடிப்படையில், சி.பி.ஐ., கடந்தாண்டு அக்டோபர் மாதம் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், அடையாளம் தெரியாதவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பயன் பெற்றதாக ஊழல் கண்காணிப்பு ஆணையம் குறிப்பிட்டிருந்த இரண்டு நிறுவனங்களின் பெயர்களை சேர்க்காதது ஏன். இந்த நிறுவனங்கள் 1,500 கோடி மற்றும் 1,600 கோடி ரூபாய்க்கு லைசென்ஸ் வாங்கிவிட்டு, சில நாட்களில் தங்களது பங்குகளை 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்று லாபம் பார்த்துள்ளன. இவர்களை விசாரணைக்கு உட்படுத்தாதது ஏன்? மேலும், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் தொலைத்தொடர்புத் துறை செயலரிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தாதது ஏன்? இவர்கள் இருவர் பற்றி, மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கையிலும், ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தின் அறிக்கையிலும் குற்றம் சுமத்தப்பட்டும், அவர்களிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்த தவறிவிட்டது. ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் என்பது அரசியல் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உயரிய அமைப்பு. எட்டாயிரம் ஆவணங்களை ஆய்வு செய்ததாகக் கூறுகிறீர்கள். ஆனால், தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவரிடமோ அல்லது தொலைத்தொடர்புத் துறை செயலரிடமோ விசாரணை நடத்தவில்லை. இது பற்றி கேட்டால், சுற்றி வளைத்துப் பேசுகிறீர்கள். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ள மனுதாரர் சார்பில் ஆஜரான பிரசாந்த் பூஷண் வாதிடுகையில் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, 2007ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி என்று முதலில் நிர்ணயித்து இருந்தனர். கடைசியில் அதை, செப்டம்பர் 25ம் தேதி என திடீரென்று மாற்றி முன் தேதியிட்டனர். இதனால், விண்ணப்பித்த 575 விண்ணப்பங்களில் 343 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ரிலையன்ஸ் அனில் அம்பானிக்கு சொந்தமான டைகர் டிரஸ்டி என்ற கம்பெனி, 50 லட்சம் பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்திற்கு 2007ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி மாற்றியுள்ளது. ஆனால், அந்த நிறுவனத்திற்கு வங்கிக் கணக்கில் ஏற்கனவே ஆயிரம் கோடி ரூபாய் இருந்துள்ளது. இந்த பங்குகள் யாருக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க, சி.பி.ஐ., எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இவ்வாறு பிரசாந்த் பூஷண் வாதிட்டார்.

“2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டிற்கான வழிமுறையை முடிவு செய்ய, அதிகாரமிக்க அமைச்சர்கள் குழுவை அமைக்கலாம் என்ற சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையை, தகவல் தொடர்புத்துறை நிராகரித்துள்ளது. இப்படி செய்தால் வழக்குகள் போடுவர் என கூறியிருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது குறித்து நீதிபதி கங்குலி கூறுகையில், “கோர்ட்டுக்கு போவார்கள் என்பதற்காக, மக்களுக்கு செய்ய வேண்டிய நல்ல விஷயத்தைச் செய்யாமல் இருப்பீர்களா? வழக்கு போடுவது ஒன்றும் குற்றச் செயல் அல்லவே’ என்றார். தகவல் தொடர்பு அமைச்சகம் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், “முன்னாள் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் வழங்கிய லைசென்சுகளை ரத்து செய்வது தொடர்பாக, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) பரிந்துரைக்காக காத்திருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *