ராஜினாமா செய்யாமல் முதல்வர் எடியூரப்பா : எம்.எல்.ஏ., ஆதரவைக்கூறி மேலிடத்திற்கு சவால்

posted in: அரசியல் | 0

பெங்களூரு : நில மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு பதிலாக, வேறு ஒருவரை முதல்வராக நியமிக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது.


ஆனால், முதல்வர் பதவியிலிருந்து விலக மறுத்து, எடியூரப்பா அடம்பிடிக்கிறார். “எனக்கு 120 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. எனக்கு பதிலாக வேறு ஒருவர் முதல்வராக நியமிக்கப்படுவாரா, என்ற கேள்விக்கே இடம் இல்லை’ என, பா.ஜ., மேலிடத்துக்கு, எடியூரப்பா சவால் விடுத்துள்ளார்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா, அரசுக்கு சொந்தமான நிலத்தை தனது மகன், மகள் மற்றும் உறவினர்களுக்கு ஒதுக்கீடு செய்ததாக, மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. “எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்’ என, அந்த கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதில் மற்றொரு திருப்பமாக, எடியூரப்பா சார்பில் நடத்தப்பட்ட பணப்பரிமாற்றங்கள் குறித்த வங்கிக் கணக்கு தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.பார்லிமென்டில் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை எதிர்த்து தீவிரமாக போராடி வரும் பா.ஜ.,வுக்கு, எடியூரப்பாவின் நில ஊழல் பிரச்னை பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து, பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங் ஆகியோர் நேற்று டில்லியில் ஆலோசனை நடத்தினர்.

இதில், இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், கட்சித் தலைவர் நிதின் கட்காரிக்கு அளிக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது.இந்த கூட்டத்தில், எடியூரப்பாவை பதவி நீக்கம் செய்தால், அவருக்கு பதிலாக யாரை நியமிப்பது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கர்நாடாகாவில் மிகச் செல்வாக்கான வீரசை லிங்காயத் பிரிவினர் ஆதரவுடைய அவரை அகற்றுவது என்பது சுலபமல்ல என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. எடியூரப்பாவின் தலைமையை மாற்றினால், அதனால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

எடியூரப்பாவிற்கு பதிலாக, லிங்காயத் இனத்தைச் சேர்ந்தவரான ஜெகதீஷ் ஷெட்டரை நியமிப்பதா? அல்லது பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த ஈஸ்வரப்பாவை நியமிப்பதா? என்பது குறித்தும் ஆலோசனை நடந்தது. எவ்வித ஊழல்களிலும் சிக்காத டாக்டர் ஆச்சார்யா அல்லது சுரேஷ் குமார் ஆகியோரை பதவியில் நியமிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.கட்சியின் மற்றொரு தரப்பினர், எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இருந்தாலும், பிரச்னையை சமாளிக்க, எடியூரப்பாவுக்கு பதிலாக, வேறு ஒருவரை முதல்வராக நியமிக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அடம்பிடிக்கிறார்இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, எடியூரப்பா அடம்பிடித்து வருகிறார். நேற்று, எடியூரப்பாவின் வீட்டில், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதன்பின், நிருபர்களிடம் எடியூரப்பா கூறியதாவது:கட்சித் தலைமை என் மீது நம்பிக்கை வைத்துள்ளது. எனவே, டில்லிக்கு யாரும் செல்லவேண்டாம் என, எம்.எல்.ஏ.,க்களிடமும், அமைச்சர்களிடமும் தெரிவித்துள்ளேன். எனக்கு ஆதரவாக 110ல் இருந்து, 120 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். வெறும் 20 பேரையோ, 40 பேரையோ வைத்துக் கொண்டு நான் அரசியல் நடத்தவில்லை. எனக்கு பதிலாக யார் முதல்வராக தேர்வு செய்யப்படுவர் என கேட்கின்றனர். எனக்கு பதிலாக நான் தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை.இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

கட்சி மேலிடத்தின் உத்தரவை ஏற்க மறுத்து, எடியூரப்பா அடம்பிடிப்பதால், பா.ஜ., மேலிடத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தால், கர்நாடக பா.ஜ.,வில் பிளவு ஏற்படுமோ என, பா.ஜ., தலைவர்கள் அஞ்சுகின்றனர். தென் மாநிலங்களில் முதலாவதாக ஆட்சியை பிடித்ததை இழக்க விருப்பமின்றியும், அதே சமயம் கட்சிக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை அகற்றமுடியாமலும் மேலிடம் இக்கட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

எடியூரப்பாவை மாற்றாதது ஏன்? மாநில பா.ஜ., தலைவர் விளக்கம் : “”முதல்வர் எடியூரப்பாவை மாற்ற வேண்டாம். தாலுகா, உள்ளாட்சி தேர்தல் வரும் இந்நேரத்தில் முதல்வர் மாற்றம் தேவையில்லை என்று கூறியுள்ளேன்,” என கர்நாடகா மாநில பா.ஜ., தலைவர் ஈஸ்வரப்பா கூறினார்.

ஷிமோகாவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:எடியூரப்பாவை மாற்றக்கூடாதென்பது தான் எனது முடிவு. இதையே மேலிடத்தில் கூறியுள்ளேன். ஆயினும் மேலிடம் எடுக்கும் முடிவை நான் ஏற்றுக் கொள்வேன். நான் முதல்வர் வேட்பாளர் இல்லை. அந்த எண்ணம் எதுவும் இல்லை. நான் யாரிடமும் முதல்வர் வேட்பாளர் என்று கூறவில்லை. பா.ஜ.,வில் மாநில தலைவர் முதல்வராக வேண்டும் என்ற மரபு இல்லை.முதல்வர் எடியூரப்பாவை மாற்ற வேண்டாம். தாலுகா, உள்ளாட்சி தேர்தல் வரும் இந்நேரத்தில் முதல்வர் மாற்றம் தேவையில்லை என்று கூறியுள்ளேன். வெறும் 28 உறுப்பினர்களை கொண்டுள்ள ம.ஜ.த.,வில், ரேவுண்ணா துணை முதல்வர், குமாரசாமி மத்திய அமைச்சர் என கனவு காண்கின்றனர்.இவ்வாறு ஈஸ்வரப்பா கூறினார்.

எடியூரப்பா அரசை கவிழ்க்க நடந்த சதி : அமைச்சர் நடத்திய ஆலோசனை அம்பலம் : கடந்த ஆகஸ்ட் மாதம் சுற்றுலா துறை அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, அசோக் சர்மா என்பவருடன் தனியார் ஓட்டல் ஒன்றில் எடியூரப்பா அரசை கவிழ்க்க திட்டம் தீட்டியுள்ளது வெளிச்சத்திற்கு தெரியவந்துள்ளது.
அசோக் சர்மா, ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் நடத்திய பேச்சு தற்போது “சிடி’ யாக வெளியாகி உள்ளது.
அதன் விவரம்:
அசோக் சர்மா: நான் கவர்னருக்கு மிகவும் நெருக்கமானவன். அவர் மூலம் எடியூரப்பா அரசை கவிழ்க்க முடியும். இதை நீண்ட நாட்களுக்கு முன்பே செய்திருக்க முடியும்.
ஜனார்த்தன ரெட்டி: ஏன் இன்னும் எடியூரப்பா அரசை கவிழ்க்காமல் இருக்கிறீர்கள்.
அசோக் சர்மா: நான் உங்களின் ஆலோசகராக இன்று இருக்கிறேன். ஒரு பெரிய தொகையை கொடுத்தால், எடியூரப்பா அரசை கவிழ்த்து விடுவேன்.
ஜனார்த்தன ரெட்டி: 20 கோடி ரூபாய் தருகிறேன். முதல் தவணையாக 15 கோடி ரூபாய் கொடுக்கிறேன்.இப்படி போகிறது உரையாடல்.

எடியூரப்பாவை நீக்கி விட்டு, அனந்தகுமாரை முதல்வராக்க ஜனார்த்தன ரெட்டி முயன்றதாகவும் தெரியவந்துள்ளது. இந்த முயற்சி ஏன் வெற்றி பெறவில்லை என்று தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *