புதுடில்லி : இந்தியாவின் முன்னணி பொதுத் துறை நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எஸ்.சி.ஐ) நிறுவனம், சரக்கு கப்பல் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனம் இம்மாத இறுதியில் அல்லது டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.சி.ஐ. நிறுவனம், ஐந்து ஆண்டுகளில் பல்வேறு விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்ள உள்ளது. இதற்காக, ஆண்டுக்கு 100 கோடி டாலர் (சுமார் ரூ.5,000 கோடி) என்ற அளவில் முதலீடு மேற்கொள்ள உள்ளது. இதில், பிற நிறுவனங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளும் அடங்கும். ஏற்கனவே 32 கப்பல்களுக்கு ஆர்டர்கள் வழங்கியுள்ள நிலையில் இந்நிறுவனம், வரும் 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 30 கப்பல்களை வாங்க ஆர்டர்கள் அளிக்க உள்ளது. நடப்பு பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்திற்குள் (2007-2012) ஒட்டுமொத்தத்தில் 62 புதிய கப்பல்களை இணைத்துக் கொள்ள உள்ளதாக இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.ஹஜாரா தெரிவித்தார். எஸ்.சி.ஐ. நிறுவனத்தில் தற்பொழுது மத்திய அரசு 80.12 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. 10 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள் எல்.ஐ.சி.யிடமும், மீதமுள்ள பங்குகள் பொதுமக்கள் வசமும் உள்ளன. மத்திய அரசு, தற்போது இந்நிறுவனத்தில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் 10 சதவீத பங்குகளை வெளியிட்டு சுமார் ரூ.1,300 கோடியை திரட்டிக் கொள்ள உள்ளது. இது தவிர, புதிதாக 10 சதவீத பங்குகளை வெளியிட்டு, அதிலிருந்து கிடைக்கும் தொகையை இந்நிறுவனம் அதன் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள உள்ளது. இரண்டாவது வெளியீட்டில், மத்திய அரசின் பங்குகள் மற்றும் புதிய பங்குகள் தலா 4.235 கோடி விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. எஸ்.சி.ஐ. நிறுவனம், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், நிகர வருவாயாக ரூ.906.52 கோடியை ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டை விட 2.7 சதவீதம் அதிகமாகும். இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர லாபம் 59.7 சதவீதம் அதிகரித்து ரூ.191.49 கோடியாக உயர்ந்துள்ளது.
Leave a Reply