வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கும் நிதித் துறை

posted in: கல்வி | 0

ஒரு காலத்தில் நிதித்துறை பணிகள், அரசால் நடத்தப்படும் வங்கிகள், எல்.ஐ.சி., தணிக்கைத்துறை போன்ற சில குறிப்பிட்ட பிரிவுகளில் மட்டுமே முடக்கப்பட்டிருந்தன.

ஆனால் இன்றைய நிலையில் வங்கி, நிதி சேவைகள், காப்பீடு(பி.எஸ்.எப்.ஐ) துறையில், ஏராளமான தனியார் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. பாரம்பரிய மேல்மட்ட துறைகளான பொறியியல், மருத்துவம், ஹோட்டல் மேலாண்மை போன்ற துறைகளை விட, இந்த புதிய நிதித்துறை வாய்ப்புகள் கவர்ச்சிகரமானதாக உள்ளன.

பெருகியுள்ள வேலைவாய்ப்புகள்:
பி.எஸ்.எப்.ஐ. தொழில்துறையானது, மிக நன்றாக வளர்ந்து வருவதாகவும், அது பல வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும் துறை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். ஐ.சி.ஆர்.ஏ. மேலாண்மை ஆலோசனை சேவைகள் அறிக்கையின்படி, இத்துறையில் 8.4 மில்லியன்(84 லட்சம்) நபர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், 2008 முதல் 2022 வரையான ஆண்டுகளில் 4.2 மில்லியன்(42 லட்சம்) ஆட்கள் இத்துறையில் தேவைப்படுவார்கள் என்றும் ஐ.சி.ஆர்.ஏ. அறிக்கை தெரிவிக்கிறது.

மனிதவளம் மற்றும் தேவைப்படும் திறன்கள் என்ற அடிப்படையில், வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறை (2022 வரை) ஆகியவற்றிலுள்ள வேலை வாய்ப்புகளை குறிப்பிடும் அந்த அறிக்கை, ஒப்பந்த அடிப்படையிலான பணிகளை பற்றியும் குறிப்பிடுகிறது. நேரடியான பணியமர்த்துதல் மட்டுமல்லாது, நேரடி விற்பனை முகவர்கள்(டி.எஸ்.ஏ), காப்பீட்டு முகவர்கள் மற்றும் மியூச்சுவல் நிதி ஆலோசகர்கள் போன்ற இடைநபர்கள் மூலமாக அதிகளவிலான ஒப்பந்த பணிகளும் உள்ளன.

கடந்த 1991 ஆம் ஆண்டின் பொருளாதார மாற்றத்திற்கு பிறகு கட்டமைக்கப்பட்ட பி.எப்.எஸ்.ஐ. -இன் அம்சங்களான வங்கி, காப்பீடு, முதலீட்டு சந்தைகள்(கேபிடல் மார்கெட்) போன்ற நடவடிக்கைகள் எப்போதுமே சுறுசுறுப்பாக இருந்தன. கடந்த 2008 -இல் பொருளாதார தேக்கநிலையால் இந்நடவடிக்கைகளில் சற்று தொய்வு ஏற்பட்டாலும், மிக வேகமாக மீண்டுவிட்டது என்பதே உண்மை. 2008 -இல் முடிந்த வருடத்தில், நாட்டின் மொத்த வளர்ச்சியில் வங்கி மற்றும் நிதித்துறைகள் 6% பங்காற்றியுள்ளன.

சில இளைஞர்கள், மீடியா மார்கெடிங் மற்றும் ஐ.டி. பொறியாளர் போன்ற பணிகளை துறந்துவிட்டு, முதலீட்டு சந்தை, முதலீட்டு வங்கியியல் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் முதலீட்டு சந்தை என்பதானது, வெளிநாட்டு முதலீடுகளால் பயன்பெறுகிறது. தற்போது நிதித்துறையில் நிறைய ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இத்துறைக்கு எம்.பி.ஏ. பட்டதாரிகள்தான் வர முடியும் என்றில்லை. இளநிலை பட்டதாரியும், விற்பனை மற்றும் சந்தை செயல்பாட்டு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *